தமிழகம்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவினருக்கு அக்கறை இல்லை: நாராயணசாமி குற்றச்சாட்டு

அ.முன்னடியான்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவினருக்கு அக்கறை இல்லை என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

‘‘மத்திய அரசிடமிருந்து தேவையான தடுப்பூசிகளைப் பெற்று புதுவை மக்கள் அனைவருக்கும் வரும் டிசம்பருக்குள் தடுப்பூசி போட வேண்டும். அதற்கான நடவடிக்கையை முதல்வர் ரங்கசாமி எடுக்க வேண்டும்.

தடுப்பூசி பற்றாக்குறையைத் தீர்க்க பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதி, எந்தவிதத் தடையுமின்றி தடுப்பூசி பெற வேண்டும். புதிதாகப் பொறுப்பேற்ற பாஜக அமைச்சர்கள், சபாநாயகர், எம்எல்ஏக்கள் டெல்லி சென்று பிரதமரைச் சந்தித்திருக்கிறார்கள். அப்போது மாநில அந்தஸ்து பற்றி அவர்கள் பேசவில்லை.

என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோருவது எங்களுடைய தலையாயக் கடமை என்று ரங்கசாமி கூறியுள்ளார். இதன் காரணமாக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்த பிரதமர் முன்னிலையில் ரங்கசாமி வைத்த கோரிக்கையை பிரதமர் உதாசினம் செய்தார்.

பாஜகவைச் சேர்ந்தவர்களும் அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்தால்தான் மாநிலத்தில் வளர்ச்சியைக் காண முடியும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அதிகாரிகள் ஆளுவதற்கு நாம் இடம்தரக் கூடாது. கடந்த 5 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் நாங்கள் பட்ட தொல்லைகள் எல்லாம் மக்களுக்குத் தெரியும்.

எனவே, மாநில அந்தஸ்து மட்டும்தான் மக்களின் உரிமையைக் காப்பதற்கான மிகப்பெரிய பாதுகாப்புக் கவசம். ஆனால், பிரதமரைச் சந்தித்த பாஜக அமைச்சர்கள், சபாநாயகர், தலைவர், எம்எல்ஏக்கள் மாநில அந்தஸ்து பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. இதிலிருந்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெறுவதில் பாஜகவினருக்கு அக்கறை இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

புதுச்சேரியில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் ரூ.1,000 அபராம் எனக் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கரோனா தொற்றுக் காலத்தில் வருமானம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். இந்த நேரத்தில் இதுபோன்று கடுமையான தண்டனையைச் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. ரூ.1,000 அபராதம் என்ற உத்தரவை உடனே புதுச்சேரி அரசு திரும்பப் பெற வேண்டும்.

மத்திய அரசு தொடர்ந்து பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வருகிறது. ஒரு பக்கம் மக்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. இன்னொரு பக்கம் விலைவாசி உயர்வு. மற்றொரு பக்கம் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வு. இவையெல்லாம் மக்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சமையல் எரிவாயு விலை உயர்வையும் உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். காங்கிரஸ் ஆட்சியில் ரவுடிகளைக் கட்டுக்குள் வைத்திருந்தோம். குண்டர் தடைச் சட்டத்தைக் கொண்டுவந்தோம். என்.ஆர்.காங்கிரஸ்-பாஜக கூட்டணி ஆட்சியில் குற்றங்கள் தலைதூக்க ஆரம்பித்துள்ளன.

அதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டிய கடமை புதுச்சேரி அரசுக்கு உண்டு. ரவுடிகள் அட்டகாசத்தைத் தடுக்கவில்லை என்றால் மக்களுக்கு நிம்மதி இருக்காது. புதுச்சேரியை அமைதியான மாநிலமாக நாங்கள் வைத்திருந்தோம். அதனைக் கருத்தில் கொண்டு இப்போது ஆட்சியில் இருப்பவர்கள் கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர்களையும், ரவுடிகளையும் அடக்கி வைக்க வேண்டும்.’’

இவ்வாறு முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.

SCROLL FOR NEXT