வரும் மாதங்களில் மிக கவனமாக பொதுமக்கள் இருக்க வேண்டும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கரோனா சிகிச்சை பிரிவை இன்று (ஜூலை 03) ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.
அதன்பின், அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
"இரண்டாம் அலை முடிந்துவிட்டதாக கவனக்குறைவாக இருக்கக்கூடாது. கவனக்குறைவாக இருந்ததால்தான் நமக்கு இரண்டாம் அலையே வந்தது. கரோனா தொற்று குறைந்துவரும் சமயத்திலும், தொற்று பரிசோதனையை குறைக்கக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இன்றைக்கு 133 நோயாளிகள் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தில் 43,745 கோவிட் படுக்கைகளில் 3,282 படுக்கைகள் மட்டுமே சிகிச்சைக்கான பயன்பாட்டில் உள்ளன. கோவிட் சந்தேகம் இருப்பவர்களுக்காக 2,778 படுக்கைகள் மட்டுமே உபயோகத்தில் உள்ளன.
பரிசோதனை, சிகிச்சை, தொடர்பில் இருப்பவர்களை கண்டறிதல் ஆகியவற்றை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். ஆங்காங்கே அதிகமாக தொற்று ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உத்திரமேரூரில் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 40 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
எனவே, காய்ச்சல் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்தி, எங்காவது 2-க்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் கண்டறியப்பட்டால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை முழுமையாக கண்டறிய வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறோம்.
வரக்கூடிய தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கோவிட் சார்ந்த வழிமுறைகளை எக்காரணம் கொண்டும் விடக்கூடாது. கண்காணிப்பை பொறுத்தவரை நிர்வாகத்திற்காக மாவட்டத்தைப் பிரித்து, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிராமங்கள் என்றால், பஞ்சாயத்து, ஒன்றியம், குடியிருப்புகளின் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் எவ்வளவு நோய்த்தொற்று உறுதியாகிறது என்பதை பார்த்து, நடவடிக்கை எடுக்கிறோம். படுக்கைகளை பொறுத்தவரையில் அபாயகட்டம் இல்லாமல் பச்சை நிறத்தில் உள்ளது.
கோவிட் வார் ரூமில் எந்தவொரு தொலைபேசி அழைப்பும் வருவதில்லை. ஆனால், இதனை கவனக்குறைவாக எடுத்துக்கொள்ளக்கூடாது.
வரும் மாதங்களில் மிக கவனமாக பொதுமக்கள் இருக்க வேண்டும். தளர்வுகள் வந்ததனால் தொற்றே இல்லை என கருதக்கூடாது. முதல்வர் அனைத்து துறைகளும் கண்காணிப்புடன் இருக்க உத்தரவிட்டுள்ளார்".
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.