திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பகுதியில் பாதுகாப்புக் காக குவிக்கப்பட்டிருந்த போலீஸார். 
தமிழகம்

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை 71 நாட்களுக்குப் பிறகு பெற்ற உறவினர்கள்: 4 எஸ்பிக்கள் தலைமையில் ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு

செய்திப்பிரிவு

பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொலை செய்யப்பட்ட கைதி முத்துமனோவின் உடலை, மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவைத் தொடர்ந்து, 71 நாட்களுக்குப் பிறகு அவரது உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

திருநெல்வேலி அருகே உள்ளவாகைக்குளத்தைச் சேர்ந்தவர் முத்துமனோ. கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்ட இவர், கடந்த ஏப்ரல் 22-ம்தேதி பாளையங்கோட்டை மத்தியசிறையில் கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

`இவ்விவகாரத்தில், சிறை அதிகாரிகள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். முத்துமனோவின் குடும்பத்துக்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’ என வலியுறுத்தி, அவரது உடலை வாங்கமறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முத்துமனோவின் தந்தை பாபநாசம் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையின்போது, முத்துமனோவின் உடலை பெற்றுக் கொள்ளுமாறு நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனாலும், உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளவில்லை.

`ஜூலை 2-ம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் உடலை பெற்றுக் கொள்ளாவிட்டால், மாநகராட்சி சார்பில் இரவு 7 மணிக்குள் அடக்கம் செய்ய வேண்டும்’ என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த முத்து மனோவின் உடலை, 71 நாட்களுக்குப் பின்னர், நேற்று அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

திருநெல்வேலி மாநகர காவல்துணை ஆணையர் சுரேஷ்குமார், சேரன்மகாதேவி சார் ஆட்சியர்சிவகிருஷ்ணமூர்த்தி, நாங்குநேரி வட்டாட்சியர் இசக்கிபாண்டி உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்தனர். பின்னர், முத்துமனோவின் உடல் வாகைக்குளத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட எஸ்பிக்கள் தலைமையில், 6 கூடுதல் எஸ்பிக்கள், 18 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முத்துமனோவின் தந்தை பாபநாசம், வழக்கறிஞர் ஜான்சன் ஆகியோர், செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘திட்டமிட்டே சதிசெய்து முத்துமனோ கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ரூ.2 கோடிநிவாரண உதவி கேட்டுள்ளோம். சிறைத் துறை அதிகாரிகளை குற்றவாளிகளாக அறிவித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால், இதுவரை அவர்களை வழக்கில் சேர்க்கவில்லை. உடலை அடக்கம் செய்தாலும் நீதிக்கான போராட்டம் தொடரும்’’ என்று தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT