‘நீர் அடித்து நீர் விலகாது’ என சிவகங்கை அமமுக நிர்வாகியிடம் சசிகலா உருக்கமாகப் பேசியுள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரசியலை விட்டு முழுமையாக விலகுவதாக சசிகலா அறிவித்தார்.
தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்த நிலையில், அதிமுக, அமமுக நிர்வாகிகளிடம் சசிகலா தொடர்ந்து தொலைபேசியில் பேசிவருகிறார். அவரது உரையாடல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிமுகவினரிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரைச் சேர்ந்த அமமுக தலைமை நிலையச் செயலாளர் கே.கே.உமாதேவனிடம் சசிகலா செல்போனில் பேசியுள்ளார். அதில் அவர் பேசியதாவது:
கரோனா ஊரடங்கு முடிந்ததும் அம்மா நினைவிடத்துக்குச் சென்றுவிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து தொண்டர்களைச் சந்திப்பேன். தொண்டர்கள் நம் பக்கம்தான் உள்ளனர் என்றார்.
அப்போது குறுக்கிட்ட உமா தேவன் முன்னாள் முதல்வர் பழனிசாமி, சி.வி.சண்முகம் பேசி வருவது குறித்து கருத்து தெரிவித்தார்.
அதற்கு பதில் அளித்து சசிகலா பேசியதாவது: ‘நீர் அடித்து நீர் விலகாது'. எம்ஜிஆர் (தலைவர்) வழியிலேயே நாம் நடக்க வேண்டும். இது பாசத்துடன் வளர்ந்த கட்சி. எம்ஜிஆர், ஜெயலலிதா (அம்மா) வழியில் நடப்போம். நிச்சயம் தமிழக மக்கள் நம்மைக் கைவிட மாட்டார்கள்.
எம்ஜிஆர், ஜெயலலிதா நம்மை விட்டுப் பிரிந்தாலும், நம்மைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். எம்ஜிஆர் அவர்களுக்கு புரிய வைத்துவிடுவார். காற்றில் தூசு பறப்பது கண்ணுக்குத் தெரியாது. அதுபோன்று, அவர்களின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.
கடந்த 1989, 1996-ம் ஆண்டுகளிலேயே இதுபோன்ற இன்னல்களைச் சந்தித்துள்ளோம். அதனால் இதுவெல்லாம் பெரிய விஷயமே இல்லை. தொண்டர்களுடன் பயணித்து நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சசிகலா அதிமுகவில் சேர வாய்ப்பே இல்லை எனக் கூறி வரும் நிலையில், சசிகலா பேசியது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தொண்டர்களுடன் சந்திப்பு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ காமராஜ் மற்றும் பார்த்திபன் ஆகியோரிடம் சசிகலா பேசும்போது, கட்சியின் நிலை குறித்து தொண்டர்கள் மிகவும் பதற்றம் அடைந்துள்ளனர். அதனால்தான் தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளேன். ஊரடங்கு நிலைசரியானதும் ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து தொண்டர்களை சந்திக்கும் பயணத்தை தொடங்குகிறேன் என்று தெரிவித்தார்.