திமுக முன்னாள் அமைச்சர் புலவர் பூ.ம.செங்குட்டுவன்(80) நேற்று காலமானார்.
திருச்சி மாவட்டம், மருங்காபுரி அருகிலுள்ள வேலக்குறிச்சியைச் சேர்ந்த இவர், மருங்காபுரிஒன்றிய திமுக செயலாளராக7 முறை பதவி வகித்தவர். மருங்காபுரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
பின்னர், 1996-ல் மருங்காபுரி தொகுதி எம்எல்ஏவாக வெற்றி பெற்று திமுக அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை மற்றும் கால்நடைத் துறை அமைச்சராக பதவி வகித்தார்.
2013-ல் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். கடந்த பிப்.25-ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவில் இணைந்தார்.
கடந்த 15 நாட்களாக கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இவருக்கு நேற்று முன்தினம் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து மணப்பாறை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மீண்டும் வீடு திரும்பிய நிலையில் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இறுதிச் சடங்குகள் இன்று மதியம் நடைபெறஉள்ளது.