ஈரோட்டில் பாலூட்டும் தாய்மார்கள் 100 பேர் வரை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில், அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர் என மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முன்களப்பணியாளர்களில் தொடங்கிய தடுப்பூசி முகாம், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் என விரிவுபடுத்தப்பட்டு தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போடலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரசின் வழிகாட்டுதலின்படி, ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 40 பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டது. அவர்கள் அனைவரும் பூரண நலத்துடன் உள்ளனர். பாலூட்டும் தாய்மார்களின் விருப்பத்திற்கு ஏற்ப தினமும் 20 பேர் வரை தடுப்பூசி போடப்படுவதாகவும், இதுவரை 100 பேர் வரை தடுப்பூசி போட்டுள்ளதாகவும் ஈரோடு மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் சவுண்டம்மாள் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
அரசின் அறிவுறுத்தல்படி பாலூட்டும் தாய்மார்களுக்கு கரோனா தடுப்பூசி போடப்படுகிறது. குழந்தை பிறந்த முதல்நாளிலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். ஆனால், சிலர் ஒரு வாரம், ஒரு மாதம் என இடைவெளி எடுத்துக்கொள்கின்றனர். எனவே, அவர்களின் விருப்பப்படி தடுப்பூசி போட்டு வருகிறோம்.
பாலூட்டும் தாய்மார்கள் தற்போது அரசு விநியோகிக்கும் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரு தடுப்பூசிகளில் எது வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம். தடுப்பூசி போட்டபின்னர், எப்போதும் வருவது போல் சிலருக்கு சாதாரண காய்ச்சல் ஏற்படலாம். தடுப்பூசி போட்டவுடன் அதற்கென பாரசிட்டமால் மாத்திரை வழங்கப்படுகிறது.
தடுப்பூசி போட்டவர்கள் தொடர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு பாலூட்டலாம். எப்போதும் போல் அவர்கள் உணவு வகைகளையும், வழக்கமாக மருத்துவர் பரிந்துரையின் கீழ் எடுத்துக் கொள்ளும் மருந்துகளையும் சாப்பிடலாம். அரசின் பரிந்துரைப்படியான இடைவெளியில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம், எனவே, பாலூட்டும் தாய்மார்கள் எவ்வித அச்சமும் இல்லாமல் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.