கடந்த 10 ஆண்டுகளாக பராமரிப்பின்றிக் கிடக்கும் வள்ளுவர் கோட்டத்தை புனரமைத்து, நூலகம் மற்றும் ஆய்வரங்கம் ஆகியவை கட்டப்படும் என்று பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தார். அப்போது துறை செயலர் சந்தீப் சக்சேனா, தலைமை பொறியாளர் இரா.விஸ்வநாத் ஆகியோர் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் வேலு கூறியதாவது:
வள்ளுவர் கோட்டத்தை கடந்த 10 ஆண்டுகளாக பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இங்குள்ள 3,500 பேர் அமரும் மிகப்பெரிய அரங்கைக்கூட பராமரிக்காமல் தரைதளம், மேல்தளம், படிக்கட்டுகள் என அனைத்தும் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. 5.5 ஏக்கர் பரப்புள்ள இந்த வளாகத்தில் 68.275 சதுரடியில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இங்குள்ள தேர், திருவாரூர் தேர் மாதிரியை வைத்து 106 அடி உயரத்திலும், சக்கரங்கள் 14 அடி உயரத்திலும் திருவண்ணாமலையில் இருந்து வரவழைக்கப்பட்ட வைரக்கல் என்ற கல்லால் வடிவமைக்கப்பட்டது.
இங்கு கழிப்பறை மற்றும் தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லை. இதை சீரமைத்து புனரமைப்பு செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. பளிங்கு கல்லில் பதிக்கப்பட்ட அனைத்து திருக்குறளும் படிக்க முடியாத நிலையில் சேதமடைந்துள்ளன.
அடிப்படை வசதிகள், மின் வசதி, கழிப்பறை மற்றும் தண்ணீர் வசதி, வண்ணம் பூசுதல் மற்றும் பூங்காவை மேம்படுத்துதல் ஆகிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து புனரமைக்க மதிப்பீடு தயார் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இங்குள்ள அரங்கம் புதுப்பிக்கப்படும்போது, நூலகம் மற்றும் ஆய்வரங்கம் தனியாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். புதுப்பிக்கப்பட்ட கூட்ட அரங்கில் பொது மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.