சென்னை மியாட் மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கரோனா தொற்று சிகிச்சை குறித்து விளக்கினார். 
தமிழகம்

சென்னை மியாட் மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை

செய்திப்பிரிவு

மியாட் மருத்துவமனையில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க அனைத்து வசதிகளையும் கொண்ட வெகுசில தனியார் மருத்துவமனைகளில் சென்னை கிண்டியை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையும் ஒன்றாகும். கரோனா 2-வது அலையில் தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டபோது, மியாட் மருத்துவமனையிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மே 17-ம் தேதி மியாட் மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், அரசு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

இதையடுத்து கடந்த மே 19-ம் தேதி மியாட் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் பிரித்வி மோகன்தாஸ், முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, கரோனா தொற்று சிகிச்சை குறித்து விளக்கினார். ஆக்சிஜன் நெருக்கடியை தீர்ப்பதில் முதல்வரின் நடவடிக்கை, மியாட் மருத்துவமனையை மட்டுமின்றி, சென்னையிலுள்ள பிற மருத்துவமனைகளையும் பெரிய நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது என்று பாராட்டினார்.

இதேபோல, தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மூலம் மியாட் மருத்துவமனையால் பலருக்கு கரோனா சிகிச்சை அளிக்க முடிந்தது. மியாட் மருத்துவமனையில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் 58 வயதான நாகராஜன். கரோனா தொற்று முதல் அலையில் வேலையை இழந்த இவர், கடந்த மே மாதம் இறுதியில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில் கடந்த ஜூன் 4-ம் தேதி மியாட் மருத்துவமனைக்கு வந்தார். டாக்டர்கள் பரிசோதித்ததில் அவருக்கு சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் போன்ற இணை நோய்கள் இருப்பது தெரியவந்தது. அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்ற அவர், குணமடைந்து வீடு திரும்பினார்.

இதுகுறித்து நாகராஜன் கூறும்போது, “ஏற்கெனவே வேலை இழப்பால் குடும்ப கஷ்டம். இதற்கிடையில், கரோனா பாதிப்பு என்னை முற்றிலுமாக நொறுக்கியது. ஆனால், நான் மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை அளிப்பதாக சொன்னது எனது குடும்பத்துக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. இதற்கு நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்றார். நாகராஜனின் மனைவி மற்றும் மகனும் நன்றியை தெரிவித்தனர் என்று மியாட் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT