மதுரையில் மீட்கப்பட்ட குழந்தைகள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனைக்குப் பின் தாயார்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். 
தமிழகம்

குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம்: மதுரை காப்பக கிளை அலுவலகத்துக்கு `சீல்' - சொகுசு காரில் வலம் வந்த நிர்வாகி எங்கே?

செய்திப்பிரிவு

குழந்தைகளை விற்பனை செய்த விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான மதுரை இதயம் டிரஸ்ட் காப்பக கிளை அலுவலகத்துக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

தலைமறைவாக உள்ள காப்பக நிர்வாகியை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர், மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே இதயம் டிரஸ்ட் என்ற பெயரில் முதியோர் காப்பகம் நடத்தினார். ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது தாயார் இங்கு தங்கியிருந்தனர்.

கடந்த மாதம் 13-ம் தேதி ஐஸ்வர்யா என்பவரின் ஒரு வயது ஆண் குழந்தை கரோனாவால் இறந்ததாகக் கூறி, சிவக்குமார், காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, ஊழியர் மதர்சா ஆகியோர் நாடகமாடினர்.

இந்நிலையில் வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் விசாரணையில், அக்குழந்தையை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், பவானி தம்பதிக்கு விற்றது தெரியவந்தது. குழந்தைகள் நலக் குழுவினர் காப்பகத்தில் நடத்திய விசாரணையில், இரண்டு வயது பெண் குழந்தை ஒன்று சக்கிமங்கலம் கல்மேடு பகுதியைச் சேர்ந்த சகுபர்சாதிக், அனீஷ்ராணி தம்பதிக்கு விற்றது தெரியவந்து. 2 குழந்தைகளையும் தனிப்படை போலீஸார் மீட்டனர். பின்னர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் பரிசோதனைக்குப் பின் குழந்தைகளை தாயார்களிடம் ஒப்படைத்தனர்.

இதைத்தொடர்ந்து இதயம் டிரஸ்ட் காப்பகம் மூடப்பட்டது. அங்கு தங்கியிருந்தோர் மற்ற காப்பகங்களுக்கு மாற்றப்பட்டனர். குழந்தைகளை விலைக்கு விற்ற விவகாரம் தொடர்பாக 2 தம்பதிகள், இடைத்தரகர்கள் செல்வி, ராஜா, காப்பக ஒருங்கிணைப்பாளர் கலைவாணி ஆகிய 7 பேரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சிவக்குமார், மதர்சாவை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

இதனிடையே, மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள மாநகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வந்த இதயம் டிரஸ்ட் கிளை அலுவலகம் அதிகாரிகளின் ஆய்வுக்குப் பின் சீல் வைக்கப்பட்டது. இது குறித்து போலீஸார் கூறியதாவது: சிவக்குமார் செய்து வந்த சமூக சேவையை பார்த்து அதிகாரிகள் சிலரும், தனியார் நிறுவனத்தினரும் அவரை ஊக்கப்படுத்தினர். இதைப் பயன்படுத்தி தனி நபர்கள் மட்டுமின்றி கார்ப்பரேட் நிறுவனங்களிடமும் அவர் நன்கொடை பெற்றுள்ளார். குழந்தைகளை விற்பனைக்கு வாங்கிய தம்பதிகளிடமும் ஏராளமான பணம் மற்றும் பொருட்களை பெற்றுள்ளார். தனக்கு கிடைத்த நன்கொடைகள் மூலம் சொகுசு கார் வாங்கியுள்ளார்.

சமூக சேவை நிகழ்ச்சி களின்போது அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், அது தொடர்பாக வெளியான செய்திகளை சேகரித்து மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையைப் பெற்று, மாநில அளவில் விருது களை பெற்றுள்ளார். அவரை விரைவில் பிடித்து விடுவோம் என்றனர்.

SCROLL FOR NEXT