கள்ளக்குறிச்சி அருகே 3 மாணவிகள் உயிரிழந்த வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி உட்பட 4 பேரின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே பங்காரம் கிராமத்தில் உள்ள எஸ்விஎஸ் இயற்கை மருத்துவக் கல்லூரி மாணவிகள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி, அவரது கணவர் சுப்ரமணியன், மகன் ஸ்வாகத் வர்மா, கல்லூரி முதல்வர் கலாநிதி, கல்லூரி ஆலோசகர் பெரு.வெங்கடேசன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்கள் 5 பேரில் சுப்ரமணியன் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனவே, வாசுகி, ஸ்வாகத் வர்மா, கலாநிதி, பெரு.வெங்கடேசன் ஆகிய 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். பின்னர், நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதன் பிறகு, கடந்த சனிக்கிழமை மாலை மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கடலூர் சிறையில் அடைத்தனர். மேலும், விசாரணை நடந்தபோது பறிமுதல் செய்யப்பட்ட வாசுகியின் கார் மற்றும் ஆவணங்களை விழுப்புரம் முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட வாசுகி உள்ளிட்ட 4 பேரையும் ஜாமீனில் விடுவிக்கக் கோரி வாசுகி தரப்பில் இருந்து விழுப்புரம் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி சரோஜினி தேவி, அந்த மனு மீதான விசாரணையை 10-ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைத்துள்ளார்.
இதற்கிடையே, மாணவிகள் உயிரிழந்த வழக்கில் கிணற்றின் உரிமையாளர் மற்றும் குத்தகை தாரரிடம் சிபிசிஐடி போலீஸார் நேற்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த 3 மாணவிகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், நீரில் மூழ்கி இறக்கவில்லை என்றும் நுரையீரலில் தண்ணீர் புகுந்ததற் கான எந்த அடையாளமும் துளியும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், விழுப்புரத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார் நேற்று மாணவிகள் சடலமாக கண்டெடுக்கப்பட்ட கிணற்றின் உரிமையாளர் ரவீந்திரனிடம் விசாரணை நடத்தினர். மேலும், அந்தக் கிணற்றைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் பரமசிவம் என்பவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர, மாணவிகள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசிப்பவர்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாகக் கூறப்படு கிறது.