தமிழகம்

ஆரணி அருகே தாயை தாக்கிய மகன் கொலை: காவல் நிலையத்தில் தந்தை சரண்

செய்திப்பிரிவு

ஆரணி அருகே தாயை தாக்கிய மகனை தந்தை அடித்துக் கொலை செய்தார்.

தி.மலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் அம்பேத்கர் நகரில் வசிப்பவர் தட்சணாமூர்த்தி. இவரது மகன் பாஸ்கரன்(33). காதல் திருமணம் செய்து கொண்டு, தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். மதுவுக்கு அடிமையாகி, பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டில் இருந்து நேற்று முன் தினம் வெளியே சென்ற பாஸ்கரன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. பின்னர் மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது, அவரை தாய் பவானி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், தாயை தாக்கிவிட்டு மீண்டும் வெளியே சென்றுள்ளார். பின்னர், இரவு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது, வீட்டில் இருந்த தந்தை தட்சணாமூர்த்தி, தாய் பவானியை தாக்கியது குறித்து கேட்டபோது இரண்டு பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த தட்சணாமூர்த்தி, வீட்டில் இருந்த இரும்பு கம்பியால் மகன் பாஸ்கரனை தாக்கியுள்ளார். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து களம்பூர் காவல் நிலையத்தில் தட்சணாமூர்த்தி சரணடைந்தார்.

இது குறித்து களம்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT