தமிழகம்

மதுரையில் குழந்தைகளை விற்ற வழக்கில் சிக்கிய காப்பக நிர்வாகி சொகுசு கார் வாங்கியது அம்பலம்: மற்றொரு அலுவலகமும் மூடல்  

என். சன்னாசி

மதுரை ஆத்திகுளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (40). இவர் மதுரை ஆயுதப்படை மைதானம் அருகே இதயம் டிரஸ்ட் என்ற பெயரில் முதியோர் காப்பகம் நடத்தினார். இவரது காப்பகத்தில் ஆதரவற்ற நிலையில், சாலையோரம் மற்றும் கணவரை இழந்து, பிரிந்து குழந்தைகளுடன் வசித்த 12-க்கும் மேற்பட்ட தாய்மார்களும் இவரது காப்பகத்தில் சில மாதமாக தங்கியிருந்தனர்.

கடந்த மாதம் 13ம் தேதி மேலூர் சேக்கிபட்டியைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்பவரின் 1 வயது ஆண் குழந்தை கரோனாவால் இறந்ததாக கூறிய சிவக்குமார், ஒருங்கிணைப்பாளர் கலைவாணி, ஊழியர் மாதர்சா ஆகியோர் மதுரை இஸ்மாயில்புரம் பகுதியைச் சேர்ந்த குழந்தையில்லாத கண்ணன்- பவானி தம்பதியருக்கு விலைக்கு விற்றிருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக வருவாய், காவல்துறையினர், குழந்தைகள் நலக்குழுவினர் காப்பகத்தில் நடத்திய விசாரணையில், மேலும், 2 வயது பெண் குழந்தை ஒன்றும் மதுரை சக்கிமங்கலம் கல்மேடு பகுதியிலுள்ள சகுபர் சாதிக்- அனீஷ் ராணி தம்பதியருக்கு விற்றது தெரிந்து, இரு குழந்தைகளும் தனிப்பபடை போலீஸாரால் மீட்கப்பட்டனர்.

குழந்தைகளை விலைக்கு விற்ற விவகாரத்தில் காப்பக நிர்வாகி சிவக்குமார், ஊழியர்கள் மாதர்சா, கலைவாணி மற்றும் சட்ட விதியை மீறி குழந்தைகளை தத்தெடுத்த இரு தம்பதி யர்கள் மற்றும் குழந்தைகளை விற்க புரோக்கர்களாக இருந்த ராஜா, செல்வி ஆகியோர் மீதும் தல்லாகுளம் காவல் ஆய்வாளர் செல்வக் குமார் பல்வேறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தார். 2 தம்பதியர், கலைவாணி, புரோக்கர்கள் செல்வி, ராஜா ஆகியோர் கைது செய்யப் பட்டனர். குழந்தைகளை விற்ற விவகாரத்தில் முக்கிய நபர்களாக கருத்தப்படும் சிவக்குமார், மாதர்சா தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால் அவர்களை, காவல் ஆணையர் பிரேமானந்த சின்கா உத்தரவின்பேரில் துணை ஆணையர் தங்கத்துரை தலைமையிலான தனிப்படையினர் தேடுகின்றனர்.

இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய வளாகத்தில் காவல்துறையினருக்கு ஒதுக்கிய அறையில் சிவக்குமாரின் டிரஸ்ட் அலுவலக கிளை ஒன்று மாநகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டது. அந்த அலுவலகத்தில் வட்டாட்சியர் முத்துவிஜயன், காவல் ஆய்வாளர்கள் செல்வக்குமார், அனுராதா, குழந்தைகள் நலக் குழு உறுப்பினர் பாண்டியராஜா உள்ளிட்டோர் நேற்று ஆய்வு செய்து, சில ஆவணங்களை கைப்பற்றினர். இதையடுத்து, அந்த அலுவலக மும் மூடப்பட்டது.

இதற்கிடையில் மீட்கப்பட்ட இரு குழந்தை களும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தது. மருத்துவ பரிசோதனையில், குழந்தைகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என, தெரியவந்தால் மதுரை பைபாஸ் ரோடு பகுதியிலுள்ள காப்பகம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள தாய்களிடம் ஒப்படைக்க, குழந்தைகள் நலக்குழுவினர் ஏற்பாடு செய்தனர்.

மேலும், இதயம் டிரஸ்டில் இருந்து மீட்கப்பட்ட 7 குழந்தைகளின் உண்மை நிலவரம் பற்றியும், குழந்தைகள் நலக்குழவினர், போலீஸார் விசாரிக்கின்றனர்.

போலீஸார் கூறியதாவது: ”காப்பகம் மற்றும் தன்னார்வலராக சிவக்குமார் செயல்பட்டுள்ளார். கடந்த கரோனா தடுப்பு ஊரடங்கின் போது, இவரது செயல்பாட்டை அறிந்த ஓரிரு அதிகாரிகளும், தனியார் நிறுவனத்தினரும் அவரை ஊக்கப்படுத்தினர். இதை தனக்கு சாதகமாக சிவக்குமார் பயன்படுத்தி இருக்கிறார். கடந்த ஓராண்டுக்கு முன், ஆயுதப்படை மைதானம் அருகே காப்பகம் ஏற்படுத்தி, இதன் மூலம் நன்கொடை என்ற பெயரில் தனது வருவாயை பெருக்கியுள்ளார். சிலரிடம் பணம் மற்றும் காப்பகத்திற்கு தேவையான பொருட்களை பெற்று இருக்கிறார். குழந்தைகளை விற்றதில் கூட அவர்கள் டிரஸ்ட் பெயரை சொல்லி, அதற்கு தேவையான வசதிகளை செய்யவேண்டும் என, பேரம் பேசி விற்றிருப்பது தெரிகிறது. டிரஸ்ட் அலுவலகத்தில் கூடுதல் செட் ஒன்றை ஏற்படுத்தி கொடுக்க இஸ்மாயில்புரம் தம்பதியிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. கரோனா நேரத்தில் அதிகாரிகளின் பரிந்துரையில் கார்ப்பரேட் நிறுவனங்களிலும் அவர், நன்கொடை வசூலித்துள்ளார். இதன் மூலம் சொகுசு கார் ஒன்றும் வாங்கி இருக்கிறார். இந்தக் காரை பயன்படுத்தி தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். ஓரிரு தினத்தில் அவரை பிடித்துவிடுவோம். இதன்மூலம் மேலும் சில விவரம் தெரியவரும் என, நம்புகிறோம்” என்றனர்.

விருதுகளை பெற்றது எப்படி?

ஏற்கெனவே காப்பக நிர்வாகி சிவக்குமாருக்கு எதிராக சில புகார்கள் எழுந்த நிலையில், உரிய நடவடிக்கை இன்றி, அவர் தனது சமூக சேவையின் மூலம் அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம், நாளிதழ்களில் வெளியான செய்தி விவரங்களை சேகரித்து, அதிகாரிகளின் துணையோடு மாவட்ட நிர்வாகத்தின் பரிந்துரையை பெற்று, மாநில அளவில் விருதுகளைப் பெற்றுள்ளார்.

இதன்படி, சிவக்குமார் ஒருமுறையும், அடுத்தமுறை 40 வயதை கடந்ததால் கலைவாணிக்கும் தமிழக முன்னாள் முதல்வர் கே.பழனிசாமி கையால் விருது வாங்கி இருக்கிறார். மேலும், மாவட்ட நிர்வாகம் மூலம் சுதந்திர தின விழாவிலும், தனது டிரஸ்டிற்கு அவர் விருது பெற்றிருக்கிறார். மேலும், கடந்த ஆண்டுக்கான சுதந்திர தின மாநில விருதுக்கும் சிவக்குமார் முயற்சித்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SCROLL FOR NEXT