நோயாளிகளை இலவசமாக அழைத்துச் செல்ல, நீலகிரி மாவட்டத்தில் 'ஆட்டோ ஆம்புலன்ஸ்' சேவை முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் மிகவும் குறுகலான சாலை உள்ளது. இங்கு ஆம்புலன்ஸ் செல்வதில் சிரமம் உள்ளதால், நோயாளிகளைச் சுமந்து வந்து, பிரதான சாலையில் உள்ள ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவமனைக்குக் கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், இத்தகைய பகுதிகளின் பிரச்னைக்குத் தீர்வு காண, 'ஆம்புரிக்ஷ்' என அழைக்கும், ஆட்டோ ஆம்புலன்ஸ்கள், முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலையைச் சேர்ந்த தன்னார்வலர் ராதிகா சாஸ்திரி என்பவரின் முயற்சியால், 6 ஆம்புலன்ஸ்கள் முதன் முறையாகக் கொண்டு வரப்பட்டுள்ளன.
தன்னார்வலர் ராதிகா பொதுமக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். இவர் அண்மையில், தன்னார்வலர்களுடன் இணைந்து குன்னூர் லாலி மருத்துவமனைக்கு இலவசமாக ஆக்ஸிஜன் உற்பத்திக் கலன்களை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து தற்போது, 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்களைக் குன்னூர், கோத்தகிரி பகுதிகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இந்த ஆட்டோ ஆம்புலன்ஸில், ஆக்ஸிஜன் சிலிண்டர் உள்ளது.
இதுகுறித்து ராதிகா கூறும்போது, ‘மத்திய பிரதேசம் ஜபல்பூர் மாவட்டத்தில் இருந்து, '470 சிசி' திறன் கொண்ட, பஜாஜ் மாக்சிமா ஆம்புலன்ஸாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதில், நோயாளிகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க வசதியாகவும், நோயாளி ஸ்ட்ரெச்சர், உதவியாளர் இருக்கை, ஆக்சிஜன் சிலிண்டர் உட்பட முக்கிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.3.5 லட்சம் மதிப்புள்ள 6 ஆட்டோ ஆம்புலன்ஸ்களைத் தற்போது குன்னூர், கேத்தி, கோத்தகிரி பகுதிகளுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேத்தி ஆரம்ப சுகாதார நிலையம், குன்னூர், கோத்தகிரி தனியார் மருத்துவமனைகளில் தன்னார்வ அமைப்புகள் மூலமாக, முதற்கட்டமாக இலவசமாக இயக்கப்படும்’ என்று தெரிவித்தார்.