அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி மறுத்த குற்றவியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, நாளையும், நாளை மறுநாளும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அடையார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினருக்கு உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் நடிகை ஒருவரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைக்கூறி பழகிய நிலையில் அவருக்கு கட்டாய கருக்கலைப்பு செய்து பின்னர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றி விட்டதாகவும், இதுகுறித்து கேட்டபோது கொலைமிரட்டல் விடுத்து, தன்னுடன் பழகியபோது எடுக்கப்பட்ட படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாக நடிகை புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கில் தான் கைது செய்யப்படாமல் இருக்கக்கோரி மணிகண்டன் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. வழக்கில் தாம் கைது செய்யப்படுவோம் என அஞ்சி மணிகண்டன் தலைமறைவானார்.
பின்னர் பெங்களூருவில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். தான் கைது செய்யப்பட்டதை அடுத்து அவர் ஜாமீன் கோரி சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றம், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகள் தள்ளுபடி ஆன நிலையில் தற்போது ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் மணிகண்டனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் அடையார் அனைத்து மகளிர் காவல்துறையினர் தாக்கல் செய்த மனுவுக்கு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.
5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி மறுத்த சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அடையார் அனைத்து மகளிர் காவல்துறையினர் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தனர். நடிகையுடன் மட்டும் பேச பயன்படுத்திய மொபைல் போன் மதுரையில் உள்ள மணிகண்டன் வீட்டில் இருக்கிறது அதை கண்டுபிடித்து விசாரிக்க வேண்டும் என்று மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன் இன்று விசாரணைக்கு வந்தது, இதையடுத்து சைதை குற்றவியல் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிபதி மணிகண்டனை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அடையார் அனைத்து மகளிர் காவல்துறையினருக்கு அனுமதி அளித்தார்.
மணிகண்டனின் மொபைலை கண்டுபிடிக்க விசாரணை நடத்த அனுமதியும், போலீஸ் காவலின்போது வழக்கறிஞர்கள் சந்திக்க அனுமதியும் அளித்தார். காவலில் வைத்து விசாரணை செய்வதை ஊடக விசாரணைக்கு பயன்படுத்த கூடாது எனவும் நீதிபதி நிர்மல்குமார் உத்தரவிட்டார்.