தமிழகம்

7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் விரைவில் அமல்: பட்ஜெட் கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு

செய்திப்பிரிவு

ஊழியர்களின் ஊதியத்தை மாற்றியமைப்பது தொடர்பாக நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 7-வது ஊதியக் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனது பரிந்துரைகளை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வழங்கியது.

மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை ஊதியம் மற்றும் இதரப் படிகளை சேர்த்து வரும் மொத்த ஊதியத்தில் 23.55 சதவீதம் உயர்வு அளிக்க ஊதியக் குழு மத்திய அரசுக்கு பரிந்துரைத்தது. ஊதியக் குழுவின் பரிந்துரைகளில் ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டிய முரண்பாடுகளை ஆராய மற்றொரு குழு அமைக்கப்பட்டது.

இந்நிலையில் 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கும் எனவும் தெரிகிறது.

இதனையடுத்து வரும் ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து புதிய ஊதிய விகிதம் அமலுக்கு வரும் என்றும், ஜனவரி 1-ம் தேதியிலிருந்து முன் தேதியிட்டு ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அமல்படுத்தப்படக் கூடும் என்றும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் எம்.துரைபாண்டியன் கூறியதா வது:

தற்போதைய ஊதியக் குழுவின் பரிந்துரை மத்திய அரசுக்கு மிகக் குறைவான செலவினம் ஏற்படும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் மிக வேகமாக மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இதற்கான அறிவிப்புகள் வரும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே வெளியாகலாம்.

எனினும் ஊதியக் குழுவின் தற்போதைய பரிந்துரைகள் ஊழியர்களுக்கு ஏற்புடையது அல்ல. ஆகவே, ஊதியக் குழுவின் பரிந்துரைகளை தற்போதைய நிலையில் அமல்படுத்தக் கூடாது என்றும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தை மேலும் உயர்த்த வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் பல்வேறு போராட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு துரைபாண்டியன் கூறினார்.

SCROLL FOR NEXT