பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இதன் பின்னர், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தின. தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலையில், தமிழகத்தில் செங்கல்பட்டு, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி உள்ளிட்ட 25 மாவட்டங்களில் அண்மையில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ எட்டியது.
இந்தநிலையில், பெட்ரோல், டீசல் விலை இன்றும் (ஜூலை 02) உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை கடந்துள்ளது.
அதேபோல், நாடு முழுவதும் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. சென்னையில்தான் சிலிண்டர் விலை அதிகமாகும். 25 ரூபாய் ஏற்றப்பட்டு, சென்னையில் ஒரு சிலிண்டர் விலை ரூ.850 ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று தன் ட்விட்டர் பக்கத்தில், "விஷம் போல ஏறிக்கொண்டிருக்கும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது மனசாட்சியற்ற செயல்.
பெட்ரோல் - டீசலுக்கு வாட் வரி குறைப்பு, எரிவாயு சிலிண்டருக்கு மானியம் என்றெல்லாம் தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற மாநிலத்தில் உள்ள திமுக அரசும் முன்வராதது கண்டனத்திற்குரியது.
ஏற்கெனவே,கரோனா பேரிடரால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் மக்கள் இதனால் மேலும் துன்பப்படுவது இவர்களது கண்களுக்கு தெரியவில்லையா?" என பதிவிட்டுள்ளார்.