மதுரையில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர். உடன், தளபதி எம்எல்ஏ, மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
தமிழகம்

மதுரையில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகன சேவை தொடக்கம்: தினமும் 250 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்

செய்திப்பிரிவு

மதுரையில் நடமாடும் கரோனா தடுப்பூசி வாகன சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் தினமும் 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தமுடியும்.

மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. தற்போது மதுரை மாநகராட்சி மற்றும் யங் இந்தியா சி.ஐ.ஐ. நிறுவனம் இணைந்து பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கும், பணிபுரியும் இடங்களுக்கும் நேரில் சென்று கரோனா தடுப்பூசி போட நடமாடும் வாகனச் சேவையை மதுரையில் தொடங்கியுள்ளன.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையர் கா.ப.கார்த்திகேயன் தலைமை வகித்தார்.

‘யங் இந்தியா’ ஏற்பாட்டில் நல்லமணி டிரான்ஸ்போர்ட்டின் என்.என்.என்.ஆர்.நல்லமணி, தடுப்பூசி சேவைக்காக இலவச பஸ் வழங்கியிருக்கிறார். மேலும் சில மாவட்டங்களில் இதேபோன்று இலவச பஸ் உதவி செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனத்தைத் தொடங்கி வைத்து ஆட்சியர் அனீஷ் சேகர் பேசியதாவது: மதுரை மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள நடமாடும் வாகனம் மூலம் மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள், நகர் பகுதிகள், ஊரகப் பகுதிகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்த முடியும். அரசு, தனியார் அலுவலக ஊழியர்களுக்கு இந்த நடமாடும் வாகனம் பயனுள்ளதாக இருக்கும். இந்த வாகனம் மூலம் நாள் ஒன்றுக்கு 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தலாம். இதில் ஒரு மருத்துவர், 2 செவிலியர்கள் பணியில் உள்ளனர் என்றார்.

SCROLL FOR NEXT