சதுரங்கப்பட்டினத்தை அடுத்த வெங்கம்பாக்கத்தில் வீட்டிலிருந்து மாயமான 11 வயது சிறுமியின் உடல் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அதேப்பகுதியைச் சேர்ந்த சிறுவனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம், சதுரங்கப்பட்டினத்தை அடுத்த வெங்கம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். கூலி தொழிலாளி. இவரது மகள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியே சென்றார். ஆனால், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால், பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சதுரங்கப்பட்டினம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அதே கிராமப்பகுதியில் ஒதுக்குப்புறமான முட்புதரில் சிறுமியின் உடல் காயங்களுடன் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனை பிடித்த போலீஸார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இச்சம்பவத்தால், வெங்கம்பாக்கம் கிராமத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.