மதுரை கீரைத்துறையைச் சேர்ந்தவர் அட்டாக் பாண்டி. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய நண்பர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகளுக்கு மேலாக பாளை. மத்திய சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில் மதுரையில் கடந்த 2007-ல் நாளிதழ் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் அட்டாக் பாண்டிக்கு 3 ஆயுள் தண்டனை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை 21.3.2019-ல் உத்தரவிட்டது. இதனிடையே அட்டாக் பாண்டியை பத்து நாட்கள் பரோலில் விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி தயாள், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
அதில், அட்டாக் பாண்டியின் தாயார் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது. தாயாரை பார்ப்பதற்காக அட்டாக்பாண்டியை 10 நாள் பரோலில் விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கல்யாணசுந்தரம், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், அட்டாக் பாண்டிக்கு பரோல் கேட்டு பாளை. சிறை கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது என்று கூறி சிறைத்துறை கண்காணிப்பாளரின் உத்தரவு நகலை தாக்கல் செய்தார்.
அதில், அட்டாக் பாண்டிக்கு தமிழ்நாடு தண்டனை தள்ளிவைத்தல் விதிகள்படி விடுப்பு வழங்குவதற்கு விதிகளில் இடமில்லை எனக் கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து மனுதாரரின் கணவருக்கு பரோல் விடுமுறை வழங்கக்கோரி அளித்த மனுவை சிறைத்துறை கண்காணிப்பாளர் நிராகரித்துள்ளார். அந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்ய உரிமை வழங்கப்படுகிறது. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.