தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலீஸார் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பாக, மதுரை சிபிசிஐடி போலீஸார் இன்று மீண்டும் சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர்.
சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளத்தை சேர்ந்த மந்திரம் என்பவரின் மகன் மகேந்திரன் (28). இவரை ஒரு கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் 23-ம் தேதி விசாரணைக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பிறகு மறுநாள் விடுவிக்கப்பட்ட மகேந்திரன், ஜூன் 11-ம் தேதி திடீரென உயிரிழந்தார்.
இதைத் தொடர்ந்து, போலீஸார் கடுமையாக தாக்கியதால் தான் மகேந்திரன் இறந்ததாக கூறி, அவரது தாய் வடிவு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த காவல் துறைக்கு உத்தரவிட்டது. அதன்பேரில், முதலில் சாத்தான்குளம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி திருநெல்வேலி டிஎஸ்பி அணில்குமார் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிவு செய்து மகேந்திரனின் தாய் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட சாட்சிகளிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், தொய்வு ஏற்பட்டதாக மகேந்திரனின் தாய் வடிவு உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.
அதன்பேரில், இந்த வழக்கு மதுரை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, மதுரை சிபிசிஐடி டிஎஸ்பி முரளிதரன் இன்று (ஜூலை 01) தூத்துக்குடிக்கு வந்தார். அவர், தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை அழைத்து விசாரணை நடத்தினார்.
இந்த விசாரணைக்காக, மகேந்திரன் போலீஸ் நிலையத்தில் இருந்தபோது, உடன் இருந்த யாக்கோபு ராஜ், மற்றும் மகேந்திரனின் சகோதரி சந்தனமாரி உள்ளிட்ட 3 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் இன்று காலை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்கள். அவர்களிடம் டிஎஸ்பி முரளிதரன் தீவிர விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தொடர்பாக, மீண்டும் விசாரணை தீவிரமடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.