மதுரை ஆவின்ல பணி நியமன முறைகேடு குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மதுரையைச் சேர்ந்த ஆனந்த்ராஜ், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
மதுரை ஆவனில் 62 பணியிடங்களை நிரப்ப 2019-ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 48 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. இந்த நியமனம் முறையாக நடைபெறவில்லை. இந்த முறைகேட்டில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மற்றும் ஆவின் அதிகாரிகள் பலருக்கு தொடர்புள்ளது.
எனவே, 2019 அறிவிப்பின் அடிப்படையில் மதுரை ஆவின் பணிக்கு 48 பேர் தேர்வு செய்யப்பட்டதில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ஆவின் முறைகேடு தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. முறைகேட்டில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதையடுத்து மனுவை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.