தமிழகத்தி்ல் கரோனா தொற்று குறைந்து வருவதால், பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களில் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 28-ம் தேதி முதல் அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, குளிர் சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால், அரசு உத்தரவுப்படி பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. முதல்நாளில் நகரப் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. தற்போது அதிகரித்துள்ளது.
அதேபோல், விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் தினமும் 300 பேருந்துகளை மட்டுமே ஆரம்பத்தில் இயக்கினோம். தற்போது, பயணிகள் வருகை அதிகரித்து வருவதால், வரும் நாட்களில் கூடுதலாக 100 விரைவு பேருந்துகளை இயக்கவுள்ளோம்’’ என்றனர்.