மாணவிகள் அளித்த பாலியல்புகாரின்பேரில் திருச்சியில்உள்ள பிரபல தனியார் கல்லூரி பேராசிரியரை கல்லூரி நிர்வாகம் நேற்று பணியிடை நீக்கம் செய்துள்ளது.
திருச்சி, புத்தூரில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் (அரசு உதவி பெறும்) தமிழ்த்துறை தலைவராக பணியாற்றி வருபவர் பால் சந்திரமோகன் (55). இவர், தங்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கல்லூரி முதுநிலை தமிழ்த் துறை மாணவிகள் 5 பேர், கல்லூரியின் உள் புகார் குழுவில் கடந்த மார்ச் மாதம் புகார் அளித்திருந்தனர்.
மேலும், அந்த பேராசிரியருக்கு உடந்தையாக இருந்தபெண் உதவிப் பேராசிரியர் மீதும் அந்த மாணவிகள் புகார் தெரிவித்திருந்தனர்.
இந்தப் புகார் தொடர்பாக கல்லூரியின் உள் புகார் குழுவில் இடம்பெற்றுள்ள மூத்த ஆண் மற்றும் பெண் பேராசிரியர்கள் மற்றும் வழக்கறிஞர் அடங்கிய குழுவினர் விசாரணை மேற்கொண்டு விசாரணை அறிக்கையை கல்லூரி நிர்வாகத்திடம் அளித்தனர்.
இந்த அறிக்கையின் அடிப்படையில், பேராசிரியர் பால்சந்திரமோகனை கல்லூரி நிர்வாகம் நேற்று பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது. மேலும், இவருக்கு உதவியதாக புகாரில் குறிப்பிட்ட பெண் உதவிப் பேராசிரியர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.