ஜவுளி தொழிலை மேம்படுத்த, ஆக்கப்பூர்வ திட்டங்கள் செயல்படுத்தப்படும் என, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.
தென்னிந்திய பஞ்சாலைக் கழகம் மற்றும் துணிநூல் தொழில் பிரதிநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம், அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் கோவையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசும்போது, ‘‘கோவையில் 54 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், 15 விசைத்தறி கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றின் கீழ் 11,361 கைத்தறி நெசவாளர்களும், 3,071 விசைத்தறி நெசவாளர்களும் உள்ளனர்.
கைத்தறி நெசவாளர்கள், விசைத்தறியாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளை அரசு உருவாக்கி வருகிறது. 152 விற்பனை நிலையங்களின் மூலம் பொருட்களை நேரடியாக கொள்முதல் செய்வதுடன், ஏறத்தாழ 600 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
முத்ரா கடன் திட்டம், சேமிப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம், முதியோர் ஓய்வூதிய திட்டம், குடும்ப ஓய்வூதிய திட்டம், மானியம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. ஜவுளி தொழிலை மேம்படுத்த மேலும், பல்வேறு ஆக்கப்பூர்வ திட்டங்கள் செயல்படுத்தப்படும்’’ என்றார்.
இக்கூட்டத்தில், துறையின் அரசு முதன்மை செயலர் அபூர்வா, ஆணையர் பீலா ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோ-ஆப்டெக்ஸ் மேலாண் இயக்குநர் டி.பி.ராஜேஷ், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத் தலைவர் அஸ்வின் சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.