தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாரபட்சமின்றி மீட்கப்படும் என்று அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர். ஆய்வுக்குப்பின் செய்தியாளர்களிடம் சேகர்பாபு கூறியதாவது:
200 ஆண்டுகள் பழமையான வடபழனி ஆதிமூலப் பெருமாள் கோயிலில் கடந்த 1960-க்குப் பின் திருப்பணி நடைபெறவில்லை. தற்போது முதல்வர் உத்தரவுப்படி இந்த கோயிலிலும் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்தப்பட உள்ளது. கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்கள் உட்பட 6 பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த அரசு பொறுப்பேற்றது முதல் கோயில்களுக்கு சொந்தமான 79 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி மதிப்புக்கு மேலான சொத்துகள் மீட்கப்பட்டுள்ளன. ஜமீன்பல்லாவரத்தில் அகத்தீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 2.2 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது. இதேபோன்று பல்வேறு கோயில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
கோயில் நிலங்களுக்கான வாடகை, தற்போதுள்ள சூழலுக்கு ஏற்ப திருத்தி அமைக்கப்படும். கோயில் நில ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா வழங்கப்படாது. அதே நேரம் நீண்டகாலம் குழுவாக ஒரே பகுதியில் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்களை வாடகைதாரர்களாக மாற்ற பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆட்சியில் கோயில் சொத்துகளை யார் ஆக்கிரமித்தாலும் பாரபட்சமின்றி மீட்கப்படுவதுடன், தவறு செய்யும் அலுவலர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து வடபழனி ஆண்டவர் கோயிலின் உப கோயிலான புலியூர் பரத்வாஜேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் உள்ள சூளைமேடு அஞ்சுகம் உதவிபெறும் தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்த அமைச்சர், பள்ளியின் சுற்றுப்புறத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சத்துணவுக்கூடத்தை புதுப்பிக்கவும் உத்தரவிட்டார்.