தாம்பரம் சானடோரியத்தில் உள்ளஅரசு நெஞ்சக மருத்துவமனையில் ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள காச நோய் ஆய்வகத்தை மருத்துவம் மற்றும் மக்கள்நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து தாம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பில் நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு எக்ஸ்ரே ஊர்தி வழங்கப்பட்டது. அந்த ஊர்தியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்வி இயக்குநர் ஆர்.நாராயணபாபு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல்நாத், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி, மருத்துவ கண்காணிப்பாளர் இரா.தர் மற்றும் மருத்துவஅலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரை 38 ஆயிரம் பேர் காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,316 பேர் அதி தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். இவர்களை காக்கும் பெரும் பொறுப்பு இந்த மருத்துவமனைக்கு இருக்கிறது. இந்த ஆய்வகம் காசநோயை விரைவாககண்டறிய உதவியாக இருக்கும்.
மேலும், ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.90 லட்சம் மதிப்பீட்டில் அதி நவீன வசதியுடன் கூடிய நடமாடும் எக்ஸ்ரே வசதியுடன் கூடிய வாகனமொன்று இந்த மருத்துவமனைக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் கிராமங்கள்தோறும் சென்று கிராமங்களில் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியாக இருக்கும்.
இவ்வாறு மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.