தமிழகம்

சிம்பு மீதான 2 வழக்கு விசாரணை ஜன. 11-க்கு ஒத்திவைப்பு; மற்றொரு வழக்கு வாபஸ்

செய்திப்பிரிவு

ஆபாச பாடல் விவகாரம் தொடர் பாக நடிகர் சிம்பு, இசை யமைப்பாளர் அனிருத் ஆகியோர் மீது சைதாப்பேட்டை பெருநகர நீதிமன்றத்தில் தொடரப்பட்ட 2 வழக்குகளின் விசாரணையை ஜனவரி 11-க்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மற்றொரு வழக்கை தாக்கல் செய்த புகார் தாரர் வழக்கை திரும்பப்பெறு வதாக அறிவித்து வாபஸ் பெற்றுக்கொண்டார்.

பெண்களை ஆபாசமாக சித்தரித்து பீப் பாடல் இயற்றி பாடியதாகக் கூறி நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகி யோர் மீது சென்னை சைதாப் பேட்டையிலுள்ள 23-வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் 4 வழக்குகள் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டன.

வழக்கறிஞர் காசி, பாட்டாளி மக்கள் கட்சி, தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன், சினிமா பத்திரிக்கை யாளர் ஜெ.பிஸ்மி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகர் லெட்சுமணன் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதில், பிஸ்மி, லெட்சுமணன் ஆகியோர் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. 23-வது பெருநகர மாஜிஸ்திரேட் எம்.சுரேஷ் இந்த வழக்கின் விசா ரணையை ஜனவரி 11-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

மேலும், பாமக தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சைதாப்பேட்டை கோர்ட்டில் சிம்பு, அனிருத் ஆகி யோர் மீது தொடர்ந்த வழக்கை நேற்று வாபஸ் பெற்றார். கட்சி மேலிடத்தின் ஆலோசனை பெறா மல் இந்த வழக்கை வெங்கடேசன் தொடர்ந்ததாகவும், அதனால் அவரை கட்சி மேலிடம் வழக்கை வாபஸ் பெறுமாறு அறிவுறுத்திய தாகவும் கூறப்படுகிறது.

சினிமா பத்திரிகையாளர் பிஸ்மியை சிம்புவின் தந்தை ராஜேந்தர் தரப்பில் சிலர் சந்தித்து பேசி வழக்கை வாபஸ் பெறுமாறு வற்புறுத்தி வருவதாக கூறப்படு கிறது. ‘சிம்பு, அவர் செய்த தவறை உணர்ந்து பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டால் வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக’ பிஸ்மி தெரிவித்துள்ளதாக கூறப் படுகிறது.

இந்நிலையில், வழக்கறிஞர் காசி தொடர்ந்த மற்றொரு வழக்கு டிசம்பர் 30-ம் தேதிக்கு இதே நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

ஆர்ப்பாட்டம்

சிம்புவுக்கு ஆதரவு தெரிவித் தும், சிம்புவுக்கு எதிராக போராடு பவர்களை கண்டித்தும் சென்னை மாவட்ட சிம்பு ரசிகர் மன்றத்தினர் வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னதாக சிம்பு ரசிகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த காவல்துறை யினரிடம் அனுமதி கேட்டனர். காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் நேற்று காலை வள்ளுவர் கோட்டம் அருகே சென்னை மாவட்ட தலைவர் குட்லக் சதீஷ் தலைமையில் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டனர். ‘அனுமதி பெறாமல் ஆர்ப்பாட்டம் நடத்தினால் அனைவரையும் கைது செய்வோம்’ என சிம்பு ரசிகர்களை போலீஸார் எச்சரித்தனர். இதையடுத்து, சிறிது நேரம் கோஷமிட்டுவிட்டு சிம்பு ரசிகர்கள் கலைந்து சென்றனர்

SCROLL FOR NEXT