தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் பரம்பு பகுதியில் ஏராளமான பாறைக்கிண்ணங்கள் காணப்படுகின்றன. இப்பகுதியை அகழாய்வு செய்ய வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி- திருநெல்வேலிதேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கிராமம் வசவப்பபுரம். இங்குபெரிய பரம்பு பகுதி உள்ளது. இதன் அருகே திருநங்கைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
இவ்வீடுகளை கட்டுவ தற்காகவும், தூத்துக்குடி- திருநெல்வேலி நான்குவழிச் சாலை பணிக்காகவும் இங்கிருந்து சரள் மண்ணை தோண்டி எடுத்துள்ளனர். அண்மையில் பெய்த மழையால் இப்பகுதியில் மண் அரிப்பு ஏற்பட்டு பூமிக்குள் புதைந்து கிடந்த ஏராளமான முதுமக்கள் தாழிகள் வெளியே தெரிகின்றன.
பாறைக்கிண்ணங்கள்
இப்பகுதியில் உள்ள சிங்கம் பாறை என்னும் இடத்தில் பாறைக் கிண்ணங்கள் காணப்படுகின்றன. இவற்றை திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உயிரியல் துறை பேராசிரியர் சுதாகர், தூத்துக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் சுப்புராஜ், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர் ஜோசப் ராஜ், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, முத்தாலங்குறிச்சி கிராமநிர்வாக அதிகாரி கந்தசுப்பு, ஆய்வு மாணவர் அபிஷ் விக்னேஷ்உள்ளிட்ட தொல்லியல் ஆர்வலர்கள் பார்வையிட்டனர். அவர்களை உள்ளூர் இளைஞர்கள் வழி நடத்தினர்.
இது குறித்து சுதாகர் கூறியதாவது: சாலைகள் அமைக்கவும், வீடு கட்டவும் இந்த பகுதியில் இருந்து கல் மற்றும் சரள் எடுத்த போது ஒரு தாழி உடைந்துள்ளது. அதனுள் ஒரு வாள் இருந்ததாகவும், அதை வருவாய்த் துறையினர் கையகப்படுத்தியதாகவும் ஊர் மக்கள் கூறுகின்றனர்.
ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்டவை
இப்பகுதியில் உள்ள தாழிகள் சிவகளையில் உள்ள தாழிகளை ஒத்துள்ளன. மேலும் ஆங்காங்கே காணப்படும் பெரிய பாறைகளில் வழுவழுப்பான இளஞ்சிவப்பு நிறத்தில் சிறு, சிறு குழிகள் இருக்கின்றன. ஒரே பாறையில் ஆறு குழிகளைப் பார்த்தோம். ஒவ்வொன்றும் உள்ளங்கை அளவில் இருக்கும் இக்குழிகள் சுமார் ஐந்து சென்டிமீட்டர் ஆழம் கொண்டவை.
நாட்டு மருந்து தயாரிக்க சில பொருட்களைப் பாறையில் வைத்து அரைத்ததால் இக்குழிகள் உருவாகியிருக்க வேண்டும் எனக் கணிக்கத் தோன்றுகிறது. இந்த குழிகளை பல ஆயிரம் ஆண்டுகள் முன் உருவாக்கியிருக்க வேண்டும் என்பது எனது கணிப்பு. தமிழக அரசு வசவப்பபுரத்தில் விரைவாக அகழாய்வு செய்ய வேண்டும் என்றார்.
100 ஆண்டுகளுக்கு முன்பு ஆதிச்சநல்லூரை ஆய்வு செய்தஇங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் இரியா தாமிரபரணி கரையில் 37 இடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என குறிப்பு எழுதி வைத்துள்ளார். அதில்வசவப்பபுரம் பரம்பும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தாமிரபரணி கரையில் அகழாய்வு களங்களைத் தேடும் பணியை மாநில தொல்லியல் துறையினர் தற்போது தொடங்கியுள்ளனர். வசவப்பபுரம் பரம்பை அவர்கள்ஆய்வு செய்து அகழாய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கவேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.