பாளை சிறையில் கைதிகள் மோதலில் கொலை செய்யப்பட்ட கைதியின் உடலை ஜூலை 2-ம் தேதிக்குள் உறவினர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.
நெல்லை வாகைகுளத்தைச் சேர்ந்தவர் முத்து மனோ. இவரைக் கொலை மிரட்டல் வழக்கில் போலீஸார் கைது செய்து ஸ்ரீவைகுண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். ஏப்ரல் 22-ம் தேதி பாளையங்கோட்டை மத்திய சிறையில் முத்து மனோ அடைக்கப்பட்டார். அன்று மதியம் சிறையில் கைதிகள் இடையே நடைபெற்ற மோதலில் முத்து மனோ கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முத்து மனோ கொலை தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும், நீதி விசாரணை நடத்தவும், ரூ.2 கோடி இழப்பீடு கேட்டும் அவரது தந்தை பாபநாசம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, முத்து மனோவின் உடலைப் பெற்று இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் 69 நாட்களாகியும் முத்து மனோவின் உடலை உறவினர்கள் வாங்காமல் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாபநாசம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நெல்லை மற்றும் வாகைகுளத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்து நெல்லை மாநகர் காவல் ஆணையர் மற்றும் நெல்லை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் அறிக்கை தாக்கல் செய்தனர்.
பின்னர் நீதிபதிகள், ''மனுதாரர் ஜூலை 2-ம் தேதி மாலை 3 மணிக்குள் மனுதாரர், தனது மகனின் உடலைப் பெற்றுக்கொண்டு இறுதிச் சடங்குகளை முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் முத்து மனோவின் உடலுக்கு மாவட்ட நிர்வாகம் இரவு 7 மணிக்குள் இறுதிச் சடங்கை நடத்தி முடிக்க வேண்டும். உடலைப் பெற்றுக்கொண்ட பிறகு மனுதாரரின் கோரிக்கைகள் குறித்து நீதிமன்றம் பரிசீலிக்கும்'' என உத்தரவிட்டனர்.