'இந்தியன் 2' பட விவகாரத்தில் லைகா நிறுவனம், இயக்குநர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது.
நடிகர் கமல் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பு பல மாதங்களாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுக்காமல் வேறு படங்களை இயக்க ஷங்கருக்குத் தடை விதிக்கக் கோரி, லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் ஷங்கர் தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என ஏற்கெனவே தனி நீதிபதி தெரிவித்தார். இந்நிலையில் இரு தரப்பும் சுமுகப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால், அதில் தீர்வு எட்டப்படவில்லை என இரு தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில், இரு தரப்புக்கும் இடையேயான பிரச்சினையில் தீர்வுகாணும் மத்தியஸ்தராக உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை நியமித்து நீதிபதி சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.
மத்தியஸ்த பேச்சுவார்த்தை முடிந்து அதில் எடுக்கப்படும் முடிவை ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி அறிக்கையாகத் தாக்கல் செய்த பிறகு, வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.