கரோனா தொற்று காரணமாக ஓய்வில் இருப்பதால் கட்சி நிர்வாகிகள் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் இன்று (ஜூன் 30) வெளியிட்ட அறிக்கை:
"தமிழக அரசியலில் மிக மிக சாதாரண, சாமானியமான சமுதாயத்தில் பிறந்து அரசியல் பொது வாழ்க்கையில் அண்ணா வகுத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்திடும் வகையில் என் மனசாட்சியுடன் தூய்மையாக அரசியல் செய்து வரும் எனக்கு கரோனா தொற்று இருந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது எனது இல்லத்தில் மருத்துவர்களின் ஆலோசனையின்படி தனிமைப்படுத்திக் கொண்டேன்.
ஆகவே, அடுத்த பதினைந்து தினங்கள் நான் முழுமையாக ஓய்வு எடுக்க வேண்டியிருப்பதால், விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், உறவினர்கள் யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த 10 தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்திட வேண்டுகிறேன். நம்முடைய விருதுநகர் மாவட்டம் என்றைக்கும் அதிமுகவின் தலைமைக்குக் கட்டுப்பட்டுச் செயல்படும். இங்கு யாரும் உட்கட்சி குழப்பம் விளைவிக்க முடியாது. சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வரும் பொய் வதந்திகளை தொண்டர்கள் யாரும் நம்ப வேண்டாம்.
என் பொது வாழ்க்கையில் பசும்பொன் தேவர் அரசியல் செய்த மண்ணில், காமராஜர் பிறந்த
மாவட்டத்தில் நானும் சாதாரண ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்து லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு அமைச்சர் பதவியிலும் அரசியல் பொது வாழ்க்கையிலும் செயல்பட்டு உள்ளேன், செயல்பட்டும் வருகிறேன்.
சில நேரங்களில் அரசியல் உணர்ச்சி மிகுந்து சில தடித்த வார்த்தைகளைப் பயன்படுத்தி உள்ளேன்.
அதற்காக வருத்தம் அடைந்து அரசியலில் பக்குவமாக தற்போது செயல்பட்டு வருகின்றேன். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவுக்காக என்னை அர்ப்பணித்துள்ளேன். நீதி வெல்லும்.
ஆகவே, இக்காலத்தில் அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், தனிமனித இடைவெளியுடன் வாழ்வோம். துரோகத்தையும் சூழ்ச்சியையும் முறியடிப்போம். ஒன்றுபடுவோம், வெற்றி பெறுவோம்".
இவ்வாறு கே.டி.ராஜேந்திரபாலாஜி தெரிவித்துள்ளார்.