தமிழகம்

சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி: விஜயகாந்தின் பதிலை பொறுத்தே திமுக அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும் - டி.கே.எஸ்.இளங்கோவன் தகவல்

செய்திப்பிரிவு

கூட்டணிக்கு வருமாறு திமுக தலைவர் கருணாநிதி விடுத்த அழைப்புக்கு விஜயகாந்த் அளிக்கும் பதிலைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்த லுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளை அரசியல் கட்சிகள் தொடங்கியுள் ளன. இந்தத் தேர்தலில் தேமுதி கவை தங்கள் பக்கம் இழுக்க அதிமுக தவிர்த்து எல்லா கட்சி களும் முயன்று வருகின்றன. தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜக தலைவர்கள் தமிழிசை சவுந்தரராஜன், பொன்.ராதாகிருஷ் ணன், எஸ்.மோகன்ராஜுலு ஆகியோர் கடந்த 19-ம் தேதி சந்தித்து பாஜக கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.

அதைத் தொடர்ந்து கடந்த 23-ம் தேதி வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், திருமாவளவன், இரா.முத்தரசன் ஆகியோர் விஜயகாந்தை சந்தித்து மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர். இந்த சந்திப்பு நடந்த சில மணி நேரங்களில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் கருணாநிதி, திமுக கூட்டணிக்கு வருமாறு விஜயகாந்துக்கு அழைப்பு விடுத்தார். எங்கள் அணியில் தேமுதிக இடம்பெற்றால் மகிழ்ச்சி அடைவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், விஜயகாந்துக்கு கருணாநிதி விடுத்த அழைப்பு குறித்து திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் அதிமுகவை தோற்கடிக்க விரும்பும் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்பதே திமுகவின் விருப்பம். அந்த அடிப்படையி லேயே திமுக கூட்டணிக்கு வருமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார். இதற்கு விஜயகாந்திடம் இருந்து பதில் வந்த பிறகே அடுத்தகட்ட நடவடிக் கைகளை முடிவு செய்ய முடியும்.

சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக இன்னும் தொடங்கவில்லை. மழை, வெள்ள நிவாரணப் பணிகள், ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்குவது போன்ற மக்கள் நலப் பிரச்சினைகளில் திமுக தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

தேர்தல் கூட்டணி அமைப்பதில் திமுக குழப்பத்தில் இருப்பதாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதர ராவ் கூறியிருக்கிறார். குழப்பம் திமுகவில் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது எந்தெந்த கட்சிகள் இருக்கின்றன என்பதை அவரால் கூற முடியுமா? எந்தக் கூட்டணியிலும் இல்லை என விஜயகாந்த் கூறுகிறார். பாமக நிறுவனர் ராமதாஸும் பாஜக, மத்திய அரசை கடுமையாக விமர் சித்து வருகிறார். பாஜக கூட்டணி யில் பலர் முதல்வர் கனவில் உள்ளனர். இப்படி குழப்பங்களை வைத்துக் கொண்டு அவர் திமுகவை குறைகூறுவது சரியல்ல.

இவ்வாறு டி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

SCROLL FOR NEXT