தமிழகம்

கோவையில் குழந்தைகளை கொன்ற குற்றவாளியை என்கவுன்ட்டர் செய்தவர் சைலேந்திரபாபு

செய்திப்பிரிவு

தமிழக காவல்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள சி.சைலேந்திரபாபு, 2010-ம் ஆண்டு கோவையில் மாநகர ஆணையராக இருந்தபோது குழந்தைகளை கொலை செய்த குற்றவாளியை அதிரடியாக என்கவுன்ட்டர் செய்தவர் ஆவார். அப்போது இந்த விவகாரம் மாநில அளவில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.

செம்மொழி மாநாட்டு பாதுகாப்பு

தமிழக காவல்துறையின், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள, டிஜிபி சி.சைலேந்திரபாபு, கடந்த 2010-ம் ஆண்டு கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார். இவரது பணிக்காலத்தில் கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்தது. முதல்வர், குடியரசுத் தலைவர், நாட்டின் பல்வேறு முக்கிய தலைவர்கள், பல நாட்டின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். உரிய முறையில் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு, எவ்வித பாதுகாப்பு குளறுபடிகளும் இல்லாமல், இந்த மாநாடு சிறப்பாக நடந்து முடிய அவர் உறுதுணையாக இருந்தார்.

குழந்தைகள் கடத்தல்

மேலும், இவரது பணிக்காலத்தின்போது, கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதம், 11 வயதுடைய சிறுமி, 8 வயதுடைய சிறுவன் ஆகியோர் அவர்களது டாக்ஸி ஓட்டுநரான பொள்ளாச்சியைச் சேர்ந்த மோகனகிருஷ்ணன் என்பவரால் கடத்தப்பட்டனர். இத்தகவல் கிடைத்தவுடன் அவர்களை மீட்க உடனடியாக களத்தில் இறங்கினார் காவல் ஆணையர் சைலேந்திரபாபு.

ஆனால், காவல்துறை நெருங்குவதை அறிந்து, எதிர்பாராதவிதமாக கால் டாக்ஸி ஓட்டுநர் மோகனகிருஷ்ணன் கடத்தப்பட்ட சிறுவன், சிறுமியை கொடூரமாக கொலை செய்தார். இச்சம்பவம் தொடர்பாக, மோகனகிருஷ்ணன், அவரது கூட்டாளி மனோகரன் ஆகியோரை கோவை மாநகர காவல்துறையினர் கைது செய்தனர்.

காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது, மோகனகிருஷ்ணன் தப்பிக்க முயன்றார். அவரை, காவல் ஆணையர் சைலேந்திரபாபு தலைமையிலான குழுவினர் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொன்றனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்றொரு குற்றவாளியான மனோகரனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

பின்னர், தண்டனை குறைப்பு செய்யப்பட்டு, அவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றப்பட்டதற்கு மக்கள் எதிர்ப்பு

கோவை மாநகர காவல் ஆணையர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு வடக்கு மண்டல ஐஜியாக சைலேந்திரபாபு நியமிக்கப்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவரை கோவையிலேயே பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் எனவும் அந்த சமயத்தில் மக்கள் சுவரொட்டிகளை ஒட்டியது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT