‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெறுவதற்காக 555 பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தார்.
வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆணைகளை வழங்கி பேசும்போது, ‘‘இத்திட்டத்தின் மூலம் மாவட்டத்தில் 38,891 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை 2,898 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. முறையான தகவல்கள் இல்லாத, 3,768 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 32,225 மனுக்கள் நிலுவையில் உள்ளன.
இம்மனுக்கள் குறித்து, தொடர்புடைய துறை அலுவலர்கள் மூலம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் தீர்வு காணப்படும். மேலும், சாலை மேம்பாடு, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதி வேண்டி பெறப்பட்ட மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன’’ என்றார். மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிறுவாணி அணையில் ஆய்வு
முன்னதாக, கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணையைஅமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் பார்வையிட்டார். குடிநீர் இருப்பு குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘காருண்யாவில், பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறந்து வைக்கப்பட்டது. நண்டங்கரை தடுப்பணையை தூர்வாரும்போது எடுக்கப்பட்ட மண்ணை, பட்டா, சிட்டாவை காட்டி விவசாயிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறுவாணி அணையில், தற்போது 25 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது’’ என்றார்.
ஆய்வின்போது, அரசு முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் அன்வர்தீன், மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ்வரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.