தமிழகம்

கோரிக்கை மனு தொடர்பாக பொதுமக்களிடம் ஆன்லைனில் கலந்துரையாடிய ஆட்சியர்

செய்திப்பிரிவு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்று வந்தது. இதில் பொதுமக்கள் நேரடியாக பங்கேற்று ஆட்சியரிடம் மனு அளித்துவந்தனர். இந்நிலையில், கரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் நேரடியாக பங்கேற்பது ரத்து செய்யப்பட்டு, ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள குறைதீர்க்கும் பெட்டியில் மனுக்களை போடலாம் என அறிவிக்கப்பட்டது. இந்த முறையே கடந்த சில வாரங்களாக பின்பற்றப்பட்டு வந்தது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று முன்தினம் ஆன்லைன் முறையில் பொதுமக்களிடம் கலந்துரையாடி மனுக்களை பெற்றுக் கொண்டார். இதுதொடர்பாக, அதிகாரிகள் கூறும்போது, ‘‘பொதுமக்கள் ஆட்சியருடன் ஆன்லைன் மூலம் கலந்துரையாட, அந்தந்த வட்டாட்சியர் அலுவலகங்களில் தொழில்நுட்ப வசதியுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமைகளில் அங்கு சென்று, ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்கையை தெரிவிக்கலாம். அடுத்த சில வாரங்களுக்கு இந்த முறையே பின்பற்றப்படும்’’ என்றனர்.

SCROLL FOR NEXT