ஈரோடு மாவட்டம் பவானி அருகேயுள்ள காடப்பநல்லூர் பகுதியில் செயல்படும் நாட்டுச்சர்க்கரை மற்றும் வெல்லம்தயாரிக்கும் ஆலைகளில், மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை மேற்கொண்டனர்.
நாட்டுச் சர்க்கரை மற்றும் வெல்லம் உற்பத்தி செய்யும் ஆலைகளில் வெள்ளைச் சர்க்கரை (அஸ்கா) மற்றும் ரசாயனப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடந்தது.
காடப்பநல்லூர் கிராமத்தில் உள்ள இரண்டு ஆலை களுக்குச் சென்ற அதிகாரிகள் கொப்பறைகளைப் பார்வை யிட்டு, சர்க்கரை தயாரிக்கும் முறைகள் குறித்து கேட்டனர்.
ஆலைகளில் 1,500 கிலோ நாட்டு சர்க்கரை மற்றும் 1,800 கிலோ அச்சு வெல்லம் இருப்பு இருந்தது. இதில் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. ஆய்வு முடிவு வரும் வரை இருப்பில் உள்ளதை விற்பனை செய்யக்கூடாது என அலு வலர்கள் எச்சரித்தனர்.
இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் கூறியதாவது:
வெல்லம் தயாரிப்பாளர்கள் கரும்புச்சாறிலிருந்து மட்டுமே வெல்லம் தயாரிக்க வேண்டும். இதில், நிறமேற்றி மற்றும் இனிப்புக்காக வெள்ளை சர்க்கரை பயன்படுத்தக் கூடாது. வெல்லம் தயாரிப்பவர்கள், ரசாயனம் பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது கண்டறியப் பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப் படும். அரசின் விதிமுறைகளை முறையாக பின்பற்றி நாட்டுச் சர்க்கரை தயாரிக்க வேண்டும். தற்போது இரு ஆலைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தில் 44 ஆலைகளில் நாட்டு சர்க்கரைமற்றும் வெல்லம் தயாரிக்கப் பட்டு வருகிறது. இவர்களுக்கு அரசு சார்பில் முறையான பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உணவுப் பொருள் கலப்படம் குறித்து 94440 42322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.