மெட்ராஸ் ரோட்டரி சங்கம் சார்பில் சென்னை மாநகராட்சியிடம் வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்புள்ள நடமாடும் கரோனா தடுப்பூசி போடும் வாகன சேவையை தொடங்கிவைக்கிறார் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி. உடன் ரோட்டரி சங்கத் தலைவர் கபில் சித்தலே, இணை தலைவர் விஸ்வநாதன், சங்கத்தின் கரோனா பரவல் தடுப்பு திட்டத் தலைவர் டாக்டர் கவுதம் தாஸ், திட்ட இயக்குநர் பாலகிருஷ்ணா, மாநகராட்சி துணை ஆணையர் விஷு மகாஜன், மாநகராட்சி மருத்துவ அதிகாரி எம்.எஸ்.ஹேமலதா..படங்கள்: பு.க.பிரவீன் 
தமிழகம்

ரூ.50 லட்சத்தில் கரோனா தடுப்பூசி வாகனம்: மாநகராட்சிக்கு மெட்ராஸ் ரோட்டரி சங்கம் வழங்கியது

செய்திப்பிரிவு

மெட்ராஸ் ரோட்டரி சங்கம் சார்பில் ரூ.50 லட்சம் மதிப்பிலான நடமாடும் கரோனா தடுப்பூசி வாகனம் சென்னை மாநகராட்சியிடம் நேற்று வழங்கப்பட்டது.

சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சங்கத் தலைவர் கபில் சித்தலே, நடமாடும் தடுப்பூசி வாகனத்தை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வழங்கினார். பின்னர், அந்த வாகனத்தின் சேவையை ஆணையர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து மெட்ராஸ் ரோட்டரி சங்க கரோனா பரவல் தடுப்பு திட்டத் தலைவர் டாக்டர் கவுதம் தாஸ் கூறும்போது, "கடந்த ஜனவரி மாதம் தமிழக அரசு கரோனா தடுப்பூசி போடத் தொடங்கியபோது, தடுப்பூசி மருந்து போக்குவரத்தில் சிக்கல் இருந்தது. இதனால், பிற மாவட்டங்களுக்கு 20 லட்சம் தடுப்பூசி டோஸ்களை கொண்டுசெல்லும் திறன் கொண்ட இரு குளிர்சாதன வாகனங்கள் மற்றும் சென்னை மாநகராட்சி மண்டலங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தடுப்பூசி முகாம்களுக்கு கொண்டுசெல்ல ஏதுவாக 10 லட்சம் டோஸ்களை கொண்டுசெல்லும் திறன்கொண்ட குளிர்சாதன வாகனங்கள், 1,000 குளிர்சாதனப் பெட்டிகளை சுகாதார துறைக்கு வழங்கினோம்.

தற்போது, பொதுமக்கள் தடுப்பூசி முகாம்களுக்கு வர சிரமப்படுகின்றனர். எனவே, ரூ.50 லட்சத்தில் `நம்பிக்கையின் வாகனம்' என்று பெயரிடப்பட்ட கரோனா தடுப்பூசி போடும் நடமாடும் வாகனத்தை மாநகராட்சிக்கு வழங்கியுள்ளோம். இதில் இரு மருத்துவர்கள், ஒரு செவிலியர், ஒரு ஆய்வக நுட்புநர் ஆகியோர் அமர்ந்து செல்லும் வசதி உள்ளது. மேலும், தடுப்பூசி மருந்துகளை குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைத்துக்கொள்ளும் வசதி, கழிப்பறை, ஆய்வக அறை, மின் தேவையை பூர்த்தி செய்ய ஜெனரேட்டர், நோயாளிகள் படுக்கை வசதி ஆகியவையும் உள்ளன" என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையர் விஷு மகாஜன், மெட்ராஸ் ரோட்டரி சங்க இணைத் தலைவர் விஸ்வநாதன், கரோனா தடுப்புப் பணி திட்ட இயக்குநர் பாலகிருஷ்ணா, மாநகராட்சி மருத்துவ அதிகாரி எம்.எஸ்.ஹேமலதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT