தமிழகம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் மத்திய சிறைக்கு திடீர் மாற்றம்

செய்திப்பிரிவு

நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனை போலீஸார் கடந்த 20-ம் தேதி கைது செய்தனர்.

இவர் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சைதாப்பேட்டை கிளைச் சிறையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சைதாப்பேட்டை கிளை சிறையிலிருந்து புழல் மத்திய சிறைக்கு நேற்று காலை மாற்றப்பட்டார். இதற்கிடையில், சிறையில் மணிகண்டன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்ததாக வெளியான தகவலை சிறைத் துறை அதிகாரிகள் மறுத்தனர். மேலும், கரோனா காலத்தில் கடைபிடிக்கப்படும் வழக்கமான நடைமுறையால் அவர் கிளைச் சிறையில் இருந்து மாற்றப்பட்டதாகவும் கூறினர்.

போலீஸ் காவல் மறுப்பு

இந்நிலையில் மணிகண்டனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அடையார் அனைத்து மகளிர் போலீஸார் சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு குற்றவியல் நடுவர் மோகனாம்பாள் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மணிகண்டன் தரப்பில், “ பெங்களூருவில் கைது செய்யும்போதே போலீஸார் அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்திவிட்டனர். தற்போது இதுதொடர்பாக 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க எந்த முக்கியத்துவமும் இல்லை” என வாதிடப்பட்டது.

போலீஸார் தரப்பில், இந்த வழக்கில் தேவையான ஆவணங்களைப் பெற வேண்டியுள்ளதால் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது, என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட குற்றவியல் நடுவர், சிறையில் உள்ள மணிகண்டனுக்கு 5 நாட்கள் காவல் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT