தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் தொடங்கிவிட்டதாக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்தார்.
திருச்சி வாழவந்தான்கோட்டை மற்றும் கொட்டப்பட்டு இலங்கைத் தமிழர் அகதிகள் முகாம்களில் அமைச்சர் கே.எஸ்.மஸ்தான் இன்று நேரில் ஆய்வு நடத்தினார். அவருடன் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் இருந்தனர்.
அப்போது மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறும்போது, ''தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்துள்ளதன் மூலம் இலங்கைத் தமிழர்களுக்கு விடிவு காலம் தொடங்கிவிட்டது. குடியுரிமைச் சட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவர நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளேன். அந்தக் கோரிக்கையை எழுப்புவதற்கு உந்துசக்தியாக இருந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற்றுத் தருவதற்கும், இங்குள்ள மக்களைப் போலவே அனைத்து உரிமைகள், அனைத்து அடிப்படை வசதிகள் ஆகியவற்றுடன் வாழ்வதற்கான உத்தரவாதத்தை திமுக அரசு நிச்சயம் தரும். உங்களது வாழ்வின் இப்போதைய நிலை மாறும், எதிர்காலம் வளமாக அமையும். அதற்கு முதல்வர் உறுதுணையாக இருப்பார்'' என்று தெரிவித்தார்.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ''உங்களது மனுக்கள் ஒவ்வொன்றுக்கும் முக்கியத்துவம் அளித்து, முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இலங்கைத் தமிழர்களின் கல்வி மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்'' என்று தெரிவித்தார்.
ஆய்வின்போதே வளர்ச்சிப் பணிக்கு ஒப்புதல்
வாழவந்தான்கோட்டை ஆய்வின்போது அங்கன்வாடி கட்டிடம் கட்டித்தர வேண்டும், குடிநீர்ப் பிரச்சினையைக் களையவும், சீரான மின்சாரம் வழங்கவும், மாதத்துக்கு 2 முறை ஆள் தணிக்கை செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைக் களையவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முகாம்வாசிகள் வைத்தனர்.
இதையடுத்து, வாழவந்தான்கோட்டை முகாமில் ரூ.25 லட்சத்தில் குடிநீர்ப் பணிகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு உத்தரவு வழங்கினார். மேலும், அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்கு மாவட்ட ஆட்சியரின் தன் விருப்ப நிதியின் கீழ் ரூ.6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தெரிவித்தார்.
ஆய்வின்போது சட்டப்பேரவையின் மணப்பாறை தொகுதி உறுப்பினர் பி.அப்துல் சமது, அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழ்நாட்டுக்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையத்தின் ஆணையர் ஜெசிந்தா லாசரஸ், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு ஆகியோர் உடனிருந்தனர்.