மரபு வழியில் தமிழ் கற்பித்தல் மிகவும் அவசியம் என உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்துள்ளார்.
உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜெயமோகன் எழுதிய, ‘வானம் சுமக்கும் பறவைகள்’ என்ற நூல் வெளியிட்டு விழா இணைய வழியில் நடைபெற்றது. இதில் நூலை வெளியிட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசியதாவது:
''தமிழைக் கற்பித்தலில் சிக்கல் உள்ளது. எந்த எழுத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பது தெரியாமல் உள்ளனர். தமிழ் தெரியாமலேயே கவிதை எழுதுகின்றனர். முதலில் அச்சரங்களைக் கற்க வேண்டும். எழுத்துகளின் உச்சரிப்புகளை ஒழுங்காகப் படித்தால் சரியாகப் படிக்க முடியும், எழுத முடியும்.
ஒரு சொல்லின் சரியான பொருளைத் தெரிந்துகொள்ள வேண்டும். அடுத்து சொற்கள், இலக்கணம், தர்க்க நூல்கள், இலக்கியம் படிக்க வேண்டும். இவற்றைப் படித்தால் கவிதை தானாகவே வரும். இதுதான் மரபு வழியில் தமிழ் கற்பிக்கும் முறையாகும்.
தமிழகத்தில் எண்பதுகளில் ஹைக்கூ கவிதைகள் பிரபலமாகின. ஹைக்கூ கவிதைகள் வந்தபிறகு ஓரளவுக்குத் தமிழ் மீதான பற்று, காதல் கொண்டவர்கள், தங்களது உணர்வுகளை ஹைக்கூ கவிதைகள் மூலம் வெளிப்படுத்தினர். எழுதும்போது யோசிக்கக் கூடாது. அதுவாக வரவேண்டும். கலைஞர்கள் யோசிக்கக் கூடாது. இயற்கையாக வரும் விஷயங்கள்தான் மனதில் நிற்கும்''.
இவ்வாறு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பேசினார்.
எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் பேசுகையில், ''இளைஞர்களில் நூற்றுக்கு 90 பேர் வாசிப்பதும் இல்லை. பெரிதாக யோசிப்பதும் இல்லை. தொலைக்காட்சி, திரைப்படம், கைபேசி, மடிக்கணினி ஆகியன அவர்களை யோசிக்க விடுவதில்லை. அதற்கு அடிமையாகவே இருக்கின்றனர். ஆனால், பத்து சதவீத இளைஞர்கள் வாசிப்புடன் வளர்ந்து வருகின்றனர்.
கற்பனையைத் தைத்தால் அது கதை. நமக்குள் கற்பனையை விதைத்தால் அது கவிதை. ஒரு கவிதையைப் படித்தால் அந்தக் கவிதையைப் பற்றிக் கொஞ்ச நேரமாவது யோசிக்க வேண்டும். கவிதையில் நகைச்சுவைக்கும் இடமுண்டு. நல்ல கவிதை உண்டியல் காசு போல் உள்ளுக்குள் தங்கிவிடும். நிறைய இலக்கியங்கள் கவிதை வடிவத்தில்தான் எழுதப்பட்டிருக்கின்றன. கவிதை எழுதிய கவிஞனை உலகம் மறக்காது'' என்று இந்திரா செளந்தர்ராஜன் தெரிவித்தார்.
முன்னதாக, கவிஞர் ஆத்மார்த்தி வரவேற்றார். வழக்கறிஞர்கள் ஸ்ரீனிவாச ராகவன், பிரபு ராஜதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.