சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த இளைஞருக்குப் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் இன்று 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வடக்குப்பட்டியைச் சேர்ந்தவர் உதயச்சந்திரன் (30). இவர், கடந்த 2019-ல் ஒரு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாக, பொன்னமராவதி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கைது செய்தனர்.
புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்த இந்த வழக்கில் இன்று (ஜூன் 29) தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அதில், குற்றம் சாட்டப்பட்ட உதயச்சந்திரனுக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத்தைக் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தைத் தமிழக அரசு வழங்க வேண்டும் என, நீதிபதி ஆர்.சத்யா உத்தரவிட்டார். அரசு வழக்கறிஞராக அங்கவி வாதாடினார்.
இவ்வழக்கில், முறையாகப் புலனாய்வு செய்த பொன்னமராவதி போலீஸாரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் பாராட்டினார்.