தமிழகம்

காரைக்குடி: முதல்வர் புகைப்படத்தை அவமதித்தவர் கைது

செய்திப்பிரிவு

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அவமதித்தாக காரைக்குடியில் சொந்தமாக துணிக்கடை நடத்திவரும் சரவணன் என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

காரைக்குடி அதிமுக நகர செயலாளர் எஸ்.மெய்யப்பன் அளித்த புகாரின் பேரில் போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

காரைக்குடியைச் சேர்ந்தவர் ஜி.சரவணன் (43). இவருக்கு அதே ஊரில் சொந்தமாக துணிக்கடை உள்ளது. இந்நிலையில், தனது துணிக்கடையில் விற்பனைக்காக வைத்திருந்த உள்ளாடை ஒன்றில் முதல்வரின் படத்தை ஒட்டி அதை வாட்ஸ் ஆப்பில் பரப்பியதாக சரவணன் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போலீஸார் விசாரணையில் சரவணன் கூறும்போது, "சென்னை மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னார்வலர்கள் அனுப்பும் நிவாரணப் பொருட்களிலும் அதிமுகவினர் முதல்வர் படத்தை ஒட்டுவதாக வெளியான செய்திகளைப் பார்த்தேன். அச்செய்தியால் எரிச்சலடைந்தேன். எனவே, எனது கடையில் இருந்த ஓர் உள்ளாடையில் முதல்வர் புகைப்படத்தை ஒட்டி அதை வாட்ஸ் ஆப்பில் எனது நண்பர்களுடன் பகிர்ந்தேன்" என்றார்.

இதனையடுத்து அவர் மீது பெண்களை தரக்குறைவாக சித்தரிப்பதை தடுக்கும் சட்டப் பிரிவு 346, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவு 3 ஆகியனவற்றின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அவர் காவலில் வைக்கப்பட்டார்.

SCROLL FOR NEXT