சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் மருந்து கையிருப்பில் இல்லாத நிலையில் நேற்று கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை.
மாநிலத் தலைநகரான சென்னையில் கரோனா தொற்றை முற்றிலும் ஒழிக்க, தகுதியுள்ள அனைவருக்கும் விரைவாக தடுப்பூசி போட்டு முடிப்பதில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
தமிழகத்தில் டெல்டா பிளஸ் வைரஸ் பரவும் பகுதிகளில் ஒன்றாக சென்னை மாவட்டம் உள்ளது. அதனால் தடுப்பூசி போடுவதை மேலும் தீவிரப்படுத்தி, கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மற்றும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மாநகராட்சி சார்பில் ஏற்கெனவே முதல் தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டு, 2-வது தவணை போட்டுக்கொள்வதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் இருப்போரைக் கண்டறிந்து, அவர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்யுமாறு களப் பணியாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், சுமார் 59 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதது தெரியவந்தது. அவர்களை அழைத்து வந்து தடுப்பூசி போடும் நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதற்காக பல்வேறு இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நாள்தோறும் நடத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், தடுப்பூசி மருந்து வரத்து இல்லாத நிலையில், கையிருப்பில் இருந்த மருந்துகளும் தீர்ந்துவிட்டதால் நேற்று மாநகராட்சிப் பகுதிகளில் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறவில்லை.