தமிழகம்

கோயில் சொத்து, சிலைகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

செய்திப்பிரிவு

கோயில் சொத்துகளுக்கும், சிலைகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பழநி பாலதண்டாயுதபாணி கோயிலுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1863-ல் இங்கிலாந்து மகாராணி தானமாக வழங்கிய 60 ஏக்கர் நிலம் தாராபுரம் தாலுகாவில் உள்ள பெரிய குமாரபாளையத்தில் உள்ளது.

விவசாயம் செய்வதற்காக ஸ்ரீரங்ககவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகியோருக்கு இந்த நிலம் வாடகைக்கு விடப்பட்டது. 1960-ம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்பு சட்டம் கொண்டு வரப்பட்டதால், இந்த நிலத்துக்கு தங்களுக்கு பட்டா வழங்கக் கோரி ஸ்ரீரங்ககவுண்டர், ராமசாமி கவுண்டர் ஆகியோரும், இந்த நிலம் கோயிலுக்குச் சொந்தமானது என்று கோயில் நிர்வாக அறங்காவலரும் ஈரோடு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இதில், நிலத்தின் மீதான சுவாதீன உரிமை பழநி பாலதண்டாயுதபாணி கோயில் தேவஸ்தானத்துக்கே சொந்தமானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து இருவரும் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘‘பழநி மலை உச்சியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமியும், மலையடிவாரத்தில் உள்ள திருமூர்த்தி சுவாமியும் ஒரே சுவாமி தான் என்றும், இரு கோயில்களையும் ஒரே தேவஸ்தானம்தான் நிர்வகிக்கிறது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மலையடிவாரத்தில் உள்ள மும்மூர்த்தி சுவாமியும், மலை உச்சியில் உள்ள பாலதண்டாயுதபாணி சுவாமியும் வெவ்வேறு என்ற மனுதாரர் தரப்பு வாதம் ஏற்புடையதல்ல என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்.

பொதுவாக குழந்தைகளுக்கு நீதிமன்றமே பாதுகாப்பு என்று சட்டம் சொல்கிறது. அதுபோல, கர்ப்பக்கிரகத்தில் உள்ள சுவாமியை பக்தர்கள் குழந்தையாகவே பாவிக்கின்றனர். அதனால்தான் குழந்தையும், தெய்வமும் ஒன்று என்கின்றனர். அந்த வகையில், கோயில் கர்ப்பக்கிரகத்தில் உள்ள சுவாமிக்கும், அதன் சிலைகள் மற்றும் சொத்துகளுக்கும் நீதிமன்றமே பாதுகாப்பு.

எனவே, மனுதாரர்கள் தங்கள் வசம் உள்ள கோயில் நிலத்தை கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT