சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணி நியமனத்துக்காக பெறப் பட்ட பணத்தை திரும்ப வழங்கக் கோரி கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான ஆர்.குமரகுருவுக்கு, தியாகதுருகம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஐயப்பன் வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். மாவட்ட நிர்வாகிகள் கூட்டத் திலும் இதுபற்றி கேள்வி எழுப்பியதால் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுகவில் சலசலப்பு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளராக இருப்பவர் உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் ஆர்.குமரகுரு. இவர் தலைமையில் கடந்த வாரம் கள்ளக்குறிச்சி அதிமுக கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கட்சியின் தோல்விக் குறித்தும், மாவட்டச் செயலாளர் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்பது குறித்தும் தியாகதுருகம் ஒன்றிய மேற்கு செயலாளர் ஐயப்பன் கேள்வி எழுப்பினார். மேலும் சாதி அடிப்படையில் கட்சியினரிடம் மாவட்டச் செயலாளர் அணுகியதால் அவரும் தோல்வியடைந்தார் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.
இதற்கு பதிலளித்த மாவட்டச் செயலாளர் குமரகுரு, தேர்தல் தோல்வி குறித்து மற்றொரு கூட்டத்தில் பேசப்படும் எனவும், தற்போது சசிகலாவுக்கு எதிரான தீர்மானம் மட்டுமே நிறைவேற்றக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்றார்.
இருப்பினும் தொடர்ந்து பேசிய ஐயப்பன், தற்போது ஆட்சி மாறிவிட்டதால், தியாகதுருகம் ஒன்றியத்தில் ஒப்பந்தப் பணிகள் எடுத்தவர்கள், தங்கள் செலுத்திய கமிஷன் தொகையை திரும்பக் கேட்கிறார்கள், அதற்கு என்ன பதில் சொல்வது எனக் கேள்வி எழுப்பிக் கொண்டேயிருந்தார். இதனிடையே சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து கூட்டத்தில் காரசாரமாக பேசிய ஐயப்பனிடம் கேட்டபோது, “கட்சியின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கட்சித் தோல்விக்கு மாவட்டச் செயலாளரே பொறுப்பு. அவரது சாதி அடிப்படையிலான அணுகுமுறையே நிர்வாகிகளை சோர்வடையச் செய்தது.
மேலும், கடந்த 2019-ம்ஆண்டு சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் நியமனம் தொடர்பாக சிலரை பரிந்துரைத்து பட்டியல் கொடுத்தோம். அதற்கு ஈடாக சில பணப் பரிவர்த்தனைகளும் நடைபெற்றிருக்கின்றன. ஆனால், அவற்றில் 140 பேருக்கு பணி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்க வேண்டும் என கோரி பலமுறை மாவட்ட செயலாளரிடம் வலியுறுத்தினேன். என்னைப் போன்ற இதர ஒன்றியச் செயலாளர்களும் வலியுறுத்தினர். ஆனால் அவர்களுக்கு இதுவரை பணம் திரும்பக் கொடுக்கப்படவில்லை. எனவே என்னிடம் பெற்ற தொகையை திரும்ப வழங்கக் கோரி வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் கொடுத்துள்ளேன்” என்றார்.
இதுதொடர்பாக குமரகுருவிடம் கேட்டபோது, “கட்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளேன். மேலும் எனக்கு அவர் எந்த நோட்டீஸூம் வழங்கவில்லை” என்றார்.