குடியிருப்புப் பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேலாக தேங்கிய மழை நீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காத திருநின்றவூர் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பேரூராட்சியின் 10, 11,12,13 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பெரியார் நகர், முத்தமிழ் நகர், சுதேசி நகர் ஆகிய குடியிருப்புப் பகுதிகளில் ஒரு மாதத்துக்கும் மேலாக மழை நீர் தேங்கி நின்றது. இதனை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதைக் கண்டித்து பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதையடுத்து, மழைநீரை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி மற்றும் பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து குடியிருப்புகளில் தேங்கிய மழைநீரை அகற்ற ஏதுவாக, ஈசா ஏரியில் இருந்து 2 மதகுகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இந்நிலையில், திருநின்றவூர் பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலராக கடந்த சில மாதங்களாக பணிபுரிந்து வந்த, ஆரணி பேரூராட்சியின் செயல் அலுவலரான முருகன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பெரியார் நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழைநீரை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்காததாலும், பாதிப்புகள் தொடர்பான முழுமையான தகவல்களை அரசின் கவனத்துக்கு கொண்டுச் செல்லாததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சிகளின் இயக்குநரகம் வட்டாரங்கள் தெரிவித்தனர். திருமழிசை பேரூராட்சி செயல் அலுவலரான குமார், திருநின்றவூர் பேரூராட்சியின் பொறுப்பு செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.