திருமருகல் அருகே இடத் தகராறில் பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், அவரைக் கொன்ற நபரை அந்தப் பெண்ணின் மகன் அடித்துக் கொலை செய்தார்.
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபால் மகன் வீரகாளி(65). இவர், திருப்பயத்தாங்குடி ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தனபாக்கியம்(52). இவர்களுக்கு பிச்சைமுத்து(34), சின்னையன்(31), முத்துப் பாண்டி(28) என 3 மகன்கள் உள்ளனர். அனைவரும் பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
வீரகாளியின் அண்ணன் சீனிவாசன் மகன் ராஜூ(38) என்பவர், தனது வீட்டுக்குப் பின்புறம் உள்ள மருங்கூர் காராமணி தெருவைச் சேர்ந்த ஜெயபால் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தனது பன்றிகளை வளர்த்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு அந்த இடத்தை ஜெயபாலிடம் இருந்து விலைக்கு வாங்கிய பிச்சைமுத்து, அந்த இடத்திலிருந்து பன்றிகளை ஓட்டிச் செல்லும்படி ராஜூவிடம் வற்புறுத்தி வந்தார்.
இந்நிலையில், நேற்று வீரகாளி வீட்டில் இருந்தபோது, அந்த வழியாக வந்த ராஜூவிடம் இடத்தை காலி செய்வது குறித்து பேசினார். இதனால், அவர் களுக்குள் தகராறு ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ராஜூ அரிவாளால் வீரகாளியை வெட்டினார். இதைப் பார்த்து தடுக்க வந்த வீரகாளியின் மனைவி தனபாக்கியத்தையும் அரிவாளால் வெட்டினார். இதில், தனபாக்கியம் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
அப்போது, அங்கு வந்த வீரகாளியின் 3-வது மகன் முத்துப்பாண்டி, கீழே உடைந்து கிடந்த சிமென்ட் காரையை எடுத்து, ராஜூவின் தலையில் தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த ராஜூவும் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த வீரகாளிக்கு நாகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த திட்டச்சேரி போலீ ஸார் அங்கு சென்று, தனபாக்கியம், ராஜூ ஆகியோரின் சடலங்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்து, முத்துப்பாண்டியை கைது செய் தனர்.