தமிழ்நாட்டிலேயே முதல் முறையாகப் பழங்குடியினப் பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் உதகையில் திறக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர் வாழ்வாதாரத்தை மேம்படுத்த பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் அழிவின் விளிம்பில் கோத்தர், தோடர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் மற்றும் பனியர் ஆகிய ஆறு பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.
2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி நீலகிரியில் மக்கள்தொகை சுமார் 7.5 லட்சம். இதில் பழங்குடியின மக்கள்தொகை 3.7 சதவீதம். உதகை நகராட்சியில் 394 பேர், குன்னூர் நகராட்சியில் 122 பேர், உதகை வட்டத்தில் 4 ஆயிரத்து 329 பேர், குன்னூர் வட்டத்தில் 2 ஆயிரத்து 397 பேர், கோத்தகிரி வட்டத்தில் 6 ஆயிரத்து 197 பேர் மற்றும் கூடலூர் வட்டத்தில் 15 ஆயிரத்து 450 பேர் என மொத்தம் 28 ஆயிரத்து 889 பேர் வசிக்கின்றனர்.
இவர்களின் கல்வி அறிவு தோடர்களுக்கு- 29.52 சதவீதம், கோத்தர் - 32.71 சதவீதம், குரும்பர் -18.13 சதவீதம், முள்ளுக்குரும்பர் - 38.15 சதவீதம், இருளர் - 21.78 சதவீதம், பனியர் - 11.27 சதவீதம் மற்றும் காட்டு நாயக்கர் - 9.03 சதவீதமாகும்.
இந்த ஆறு பழங்குடியின மக்களில் தோடர் மற்றும் கோத்தர் இன மக்களிடம் நிலங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் உள்ளதால் இவர்கள் முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆனால் இருளர், பனியர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய பிற பழங்குடியின மக்கள் சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளாகியும் போதிய முன்னேற்றம் அடையவில்லை.
கூடலூர் தாலுக்கா, குன்னூர் தாலுக்காக்களில் வசிக்கும் பனியர், இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் இன மக்கள் இன்றும் விவசாயக் கூலிகளாக வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளது.
வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை
இந்நிலையில், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம் இம்மக்களின் குறிப்பாகப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதையடுத்து உதகை அருகே பாலாடாவில் அமைந்துள்ள பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்தின் அருகிலேயே, பெண்கள் நடத்தும் வகையில் பெட்ரோல் பங்க் புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே பழங்குடியினப் பெண்கள் நடத்தும் பெட்ரோல் பங்க் இதுவே. நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 பழங்குடியினரை உள்ளடக்கி இந்த பங்க் செயல்படுகிறது. ஒவ்வொரு பழங்குடியினத்தில் இருந்தும் இரு பெண்கள் என 12 பெண்கள் ஷிப்ட் முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு 8 மணி நேரப் பணி. 8 மணி நேரத்துக்கு மேல் பணி செய்தால், ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது. இந்த பங்க் ஊராட்சிப் பகுதியில் உள்ளதால் லிட்டருக்கு 87 பைசா குறைவாக பெட்ரோல் கிடைக்கிறது. பாலாடா சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளதால், விளைபொருட்களை எடுத்துச் செல்லும் லாரி, ஜீப் ஆகிய வாகனங்கள் அங்கேயே உள்ள இந்த பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல், டீசல் நிரப்பிச் செல்கின்றன.
இதுகுறித்துப் பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் ச.உதயகுமார் கூறும்போது, ''மத்தியப் பழங்குடியின நல அமைச்சகம் மற்றும் மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோத்தர் மற்றும் தோடர் பழங்குடியினர் அரசின் சலுகைகளைப் பெற்று முன்னேறியுள்ளனர். ஆனால், கூடலூர், பந்தலூர் பகுதிகளைச் சேர்ந்த பனியர், காட்டு நாயக்கர் ஆகிய பழங்குடியினர் விவசாயக் கூலிகளாகவே வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். அவர்கள் வெளியில் வருவதில்லை. இந்நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவே, அவர்களின் தலைவர்களுடன் பேசி இப்பணிக்கு வரச் சம்மதிக்க வைத்துள்ளோம்.
இவர்களுக்கு மாதந்தோறும் ரூ.8,500 மற்றும் 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இவர்களது ஊதியம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஊக்கத்தொகையும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி பழங்குடியினர் தங்க, பழங்குடியினர் ஆராய்ச்சி மையத்திலேயே தங்கும் வசதி ஏற்படுத்தப்படுள்ளது'' என்று தெரிவித்தார்.
கோத்தகிரி நெடுகல்கொம்பையில் இருந்து வரும் உமா, கோத்தகிரி அருகே அரக்காடு பகுதியில் இருந்து இருளரான நதியா, தோடர் இனத்தைச் சேர்ந்த டெய்ஸி, முத்தொரை பாலாடா தோடர் காலனியில் இருந்துவந்து பணிபுரிகின்றனர்.
இவர்கள் கூறும் போது, ''ஊரடங்கு காரணமாக கடந்த இரு ஆண்டுகளாகக் குடும்பத் தலைவர்களுக்கு முறையாக வேலை இல்லை. இந்நிலையில், பெட்ரோல் பங்க் பணியால் ஊரடங்கிலும் வேலை இருப்பது மட்டுமல்லாமல், குடும்ப வருவாய்க்குப் பெரிதும் உதவுகிறது'' என்று தெரிவித்தனர்.