மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்தப்படும் பணிகள் 2 வாரத்தில் முடிக்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையம் விரிவாக்கம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் கே.பி.கார்த்திகேயன், ஏர்போர்ட் இயக்குநர் செந்தில்வளவன் முன்னிலை வகித்தனர். ஆய்வுக் கூட்டத்தில் வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினர்.
ஆய்வக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மதுரை விமான நிலைய விரிவாக்கம் நீண்ட காலமாகவே தாமதமாக உள்ளது. இதற்காக 615 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த வேண்டும். அரசு புறம்போக்கு நிலம் 150 ஏக்கருக்கு மேல் உள்ளது. மீதி 450 ஏக்கரை, மாநில அரசு கையகப்படுத்தி விமான நிலைய நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். அதன்பிறகுதான் விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடியும். தற்போது 7,500 அடி நீளமே ரன்வே உள்ளது. விரிவாக்கப் பணிகள் நிறைவு பெற்றால் ரன்வே 12,500 அடி நீளமாக நீட்டிக்கப்படும். இப்பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வரிடம் வைத்துள்ளோம்.
அவரின் ஆலோசனையில் மாவட்ட ஆட்சியர் அந்தப் பணிகளை மேற்கொள்வார். இன்னும் 2 வாரத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடையும். இதற்காக மத்திய அரசிடம் நிதி பெறுவதற்கும், மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் விமானத்துறை அமைச்சரிடம் வைத்துள்ளோம்.
தற்போது சிங்கப்பூர் போன்ற ஒருசில நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டாலும், சுங்க விமான நிலையமாக (customs airport) மட்டுமே மதுரை விமான நிலையம் செயல்படுகிறது. அதை முழு அளவில் சர்வதேச விமான நிலையமாக மாற்றினால் இன்னும் கூடுதலாக வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வரும். அடுத்த ஆண்டு இறுதிக்குள் விரிவாக்கப் பணிகளை முடித்து, சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றால் தென் மாவட்டங்கள் மிகப்பெரிய பலன் அடையும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்று அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
திருச்சிக்கு அதீத முக்கியத்துவமா?
செய்தியாளர்கள், ‘‘திருச்சி விமான நிலையத்திற்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் மதுரை விமான நிலையத்திற்குக் கொடுக்கப்படுவதில்லை என்ற பரவலான குற்றச்சாட்டு உள்ளதே?’’ என்று கேட்டனர்.
அதற்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறும்போது, ‘‘அத்தகைய குற்றச்சாட்டைக் கூறக் கூடாது. நாங்கள் ஒரே மாநிலத்தில், ஒரே ஆட்சியில் இருக்கிறோம். குற்றச்சாட்டுக்குத் தெளிவான இரண்டு வித்தியாசங்களைச் சொல்கிறேன். திருச்சியும், கோவையும் ஏற்கெனவே சர்வதேச விமான நிலைய அந்தஸ்தைப் பெற்றவை. மதுரை விமான நிலையம், அந்த அந்தஸ்தைப் பெற வேண்டும்.
இரண்டாவது, சர்வதேச அந்தஸ்து வழங்கினால் வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்குத் தரையிறங்கும் அனுமதி வழங்க வேண்டும். அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், வெளிநாட்டு விமான நிறுவனங்கள் அதிக அளவு விமானங்களை இயக்கினால், இந்தியாவில் உள்ள ஒருசில விமான நிறுவனங்களும் பாதிக்கப்படும். ஏற்கெனவே சில விமான நிறுவனங்கள் இந்தியாவில் திவாலாகிவிட்டன. அதற்காக மத்திய அரசு சர்வதேச அந்தஸ்து வழங்காமல் தாமதம் செய்யலாம். ஆனால், அது மட்டுமே காரணமாக இருக்க முடியாது’’ என்று தெரிவித்தார்.