ஆம்பூர் அருகே முன்னால் சென்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் கவலைக்கிடமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, மற்றொரு விபத்தில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததில், காரில் பயணித்த 7 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது:
”சென்னை, நங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமெளலி (55). இவரது மனைவி வசுந்தராதேவி (47). இவர்களது மகன் வேணுகோபால் (26). இவருக்கு கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் திருமண நிச்சயதார்த்த விழா நேற்று நடைபெற்றது. இதற்காக சந்திரமெளலி தன் மனைவி, மகனுடன் காரில் கிருஷ்ணகிரிக்குப் புறப்பட்டார். வழியில், ராணிப்பேட்டையில் உள்ள மாப்பிள்ளை வேணுகோபாலின் தாத்தா கண்ணைய்யா (94) என்பவரை அழைத்துக்கொண்டு கிருஷ்ணகிரிக்குச் சென்ற சந்திரமெளலி அங்கு பெண் வீட்டில் நிச்சயதார்த்தத்தை முடித்துவிட்டு மீண்டும் காரில் சென்னைக்குப் புறப்பட்டனர். மாப்பிள்ளை வேணுகோபால் காரை ஓட்டினார். முன் இருக்கையில் தாத்தா கண்ணைய்யாவும், பின் இருக்கையில் சந்திரமெளலியும், வசுந்தராதேவியும் அமர்ந்திருந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த செங்கிலிகுப்பம் என்ற இடத்தில் இரவு 10.35 மணிக்கு வந்தபோது முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றபோது எதிர்பாரவிதமாக லாரி மீது கார் பின்பக்கமாக மோதியது. இதில், கார் நொறுங்கியது. காரின் இடிபாடுகளில் 4 பேரும் சிக்கினர்.
இந்த விபத்தைக் கண்டதும் அந்த வழியாகச் சென்றவர்கள், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். விபத்து குறித்து தகவலறிந்ததும் ஆம்பூர் கிராமியக் காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணிகளைத் துரிதப்படுத்தினர்.
இந்த விபத்தில் மாப்பிள்ளை வேணுகோபால், அவரது தாத்தா கண்ணைய்யா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். வசுந்தராதேவியும், அவரது கணவர் சந்திரமெளலியும் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சைப் பலனின்றி வசுந்தராதேவியும் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, உயிரிழப்பு எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சந்திரமெளலி மேல் சிகிச்கைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து ஆம்பூர் கிராமியக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்”.
இவ்வாறு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மற்றொரு விபத்து:
கர்நாடகா மாநிலம், பெங்களூரு, எஸ்.ஆர்.கே.கார்டன் 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அஷ்ரப்புல்லா (46). இவர் தனது குடும்பத்தாருடன் சென்னை கூடுவாஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு நேற்று காலை சென்றார். பிறகு, மாலை 6.30 மணிக்குச் சென்னையில் இருந்து புறப்பட்டு பெங்களூருக்குத் திரும்பினார். காரை அஷ்ரப்புல்லா ஓட்டினார்.
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனூர் தேவிகாபுரம் அருகே இரவு 10.50 மணிக்கு கார் வந்தபோது, காரின் இன்ஜினில் இருந்து புகை வந்தது. இதைக் கண்டதும், அஷ்ரப்புல்லா காரை தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தி காரில் இருந்த 2 ஆண்கள், 3 பெண்கள், 2 குழந்தைகள் என 7 பேரையும் கீழே இறக்கினார்.
அப்போது கார் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. உடனே, ஆம்பூர் கிராமியக் காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத் துறையினர் வருவதற்குள்ளாக கார் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. காரில் இருந்து புகை வந்ததும், அஷ்ரப்புல்லா அதை கவனித்து அனைவரையும் உடனடியாகக் கீழே இறக்கியதால் 7 பேர் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்தும் ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து நடைபெற்ற இந்த 2 விபத்துகளால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.